ஆன்மிகம்
களியக்காவிளையில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட போது எடுத்த படம்.

இருமாநில எல்லையில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வரவேற்பு

Published On 2021-10-05 05:15 GMT   |   Update On 2021-10-05 05:15 GMT
கேரள போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் இருமாநில எல்லையில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு வருடமும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கம். இந்த வருட நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதனையொட்டி கடந்த 2-ந் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை சென்றடைந்தது. நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமிசிலைகளும் சங்கமித்து பல்லக்குகளில் ஊர்வலமாக புறப்பட்டது. அன்றைய தினம் இரவு சாமி சிலைகள் குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. முன்னதாக இருமாநில அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முன்னிலையில் அரண்மனையில் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று காலையில் மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. குமரி-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு கேரள அறநிலைய துறை சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி சிலைகள் கேரள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக சாமிசிலை ஊர்வலம் குழித்துறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, களியக்காவிளைக்கு 7.30 மணிக்கு சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

கேரளாவுக்கு சென்ற சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலில் இரவில் தங்க வைக்கப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சாமி சிலைகள் அங்கிருந்து புறப்பட்டு பத்மநாபசாமி கோவிலை சென்றடைகிறது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், கேரள தேவசம்போர்டு தலைவர் ராசு, நெய்யாற்றின் கரை துணை சூப்பிரண்டு அனில்குமார், பாறசாலை எம்.எல்.ஏ. ஆன்சலாம், கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட், குமரி மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு தலைவர் சசிகுமார், விசுவ இந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் சுபாஷ் குமார், பா. ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், குழித்துறை நகரமன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரத்தினமணி, விஜூ மற்றும் பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News