ஆன்மிகம்
கோவிலின் முகப்பு தோற்றம், பிளேக் மாரியம்மன்

தீராத நோய்களை தீர்க்கும் பிளேக் மாரியம்மன் கோவில்

Published On 2020-08-13 02:23 GMT   |   Update On 2020-08-13 02:23 GMT
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில், சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தல அம்மனை வேண்டிக்கொண்டால், விரைவில் நோய் குணமாகும்.
கோவை மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. இதில் சின்னவேடம்பட்டியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில், சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இங்கு கன்னிமூல கணபதி, மங்கையம்மன், நாகம்மன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. வடக்கு திசை நோக்கி பிளேக் மாரியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் அம்மனை மனமுருகி வழிபட்டால், அவர்களின் நோய் தீருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் சின்னவேடம் பட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன் என்பவர், பசு மாடுகளை வளர்த்து வந்தார். ஒரு சமயம் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து மாரியம்மனாக பாவித்து வணங்கி வந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் நாச்சியப்பனை, கேலி- கிண்டல் செய்தனர். இருப்பினும் அவர் அந்தக் கல்லுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. நாட்கள் செல்லச் செல்ல நாச்சியப்பனின் செயலால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்களில் சிலர், “நாச்சியப்பா... வெறும் கையின் மீது ஒரு பூச்சட்டி (அக்னிசட்டி) ஏந்தி, 3 முறை ஊரைச் சுற்றி வந்தால் அம்மன் இருப்பதாக நம்புகிறோம்” என்றனர்.

இதனை நாச்சியப்பனும் ஒத்துக்கொண் டார். ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு சட்டியில் அக்னி வளர்க்கப்பட்டது. நாச்சியப்பன் ஒரு கண நேரம் கண்களை மூடி, அம்மனை வழிபட்டார். “தாயே நான் உன் மீது வைத்திருக்கும் அளவற்ற பக்தியை இந்த உலகம் உணர்ந்து கொள்ள இந்த அக்னிசட்டியை, பூச்சட்டியாக மாற்றி அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். பின்னர் அந்த அக்னி சட்டியை தன் கைகளில் ஏந்தினார். உடனே கூடியிருந்த மக்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என்று பக்தி குரல் எழுப்பினர். நாச்சியப்பன் எந்தவிதமான பதற்றமும் இன்றி, ஊரை மூன்று முறை வலம் வந்து அக்னி சட்டியை இறக்கி வைத்தார். ஊர் மக்கள் அனைவரும், அம்மனின் அருளையும், நாச்சியப்பனின் பக்தியையும் புரிந்துகொண்டனர்.

பின்னர் நாச்சியப்பனையும் அவர் கும்பிட்டு கொண்டிருந்த கல்லையும் வணங்கிய ஊர் மக்கள், “நாச்சியப்பா.. உன் பக்தி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. பூச்சட்டியை கையில் ஏந்தி வலம் வந்ததால் இன்று முதல் உன் பெயர் பூநாச்சி. நீ இங்கு வைத்து கும்பிட்டு கொண்டிருக்கும் அம்மன், மாரியம்மன். இந்த அம்மனின் வருகையால் நம் ஊரில் தற்போது பரவியிருக்கும் கொடிய நோயான பிளேக் நோய் நீங்கினால் அது அம்மனின் தெய்வீக அருளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்றனர்.

பிறகு ஊர் மக்கள் எல்லோரும் கூடி முடிவு செய்தபடி, பூநாச்சி வணங்கி கொண்டிருந்த அம்மனை எடுத்து வந்து ஊருக்குள் இருந்த மங்கையம்மன் கோவிலில் வைத்து வணங்கினார்கள். அடுத்த நாளே இந்த ஊரில் பிளேக் நோய் குணமாகத் தொடங்கியது. இதனால் இந்த அம்மனுக்கு ‘பிளேக் மாரியம்மன்’ என்று பெயர் ஏற்பட்டது.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தல அம்மனை வேண்டிக்கொண்டால், விரைவில் நோய் குணமாகும். அப்படி நோய் அவதியில் இருந்து விடுபட்டவர்கள், அம்மனுக்கு பூ, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், சேலை ஆகியவற்றை நேர்த்திக்கடனாக வழங்குவதுடன், பொங்கல் வைத்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். பூ நாச்சியப்பன் மண்கொண்டு கட்டிய கோவில் சிதிலமடைந்ததால், தற்போது கல் கோவிலாக கட்டப்பட்டுள்ளது. காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கப்படி மங்கையம்மன் கோவில் வெட்டவெளி மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்கரகம், சக்தி கரகம், பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மங்கையம்மனுக்கு கரும்பு கொண்டு பந்தல் அமைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சின்னவேடம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
Tags:    

Similar News