ஆன்மிகம்

வேண்டிய வரம் தரும் பரக்காட்டு பகவதி கோவில்

Published On 2019-06-26 01:36 GMT   |   Update On 2019-06-26 01:36 GMT
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் அருகே, காவச்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, பரக்காட்டு பகவதி தேவி ஆலயம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் அருகே, காவச்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, பரக்காட்டு பகவதி தேவி ஆலயம். இந்த அன்னை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பல சமுதாயத்தினரின் குல தெய்வமாகவும் இருந்து வருகிறாள். பக்தர்கள் வேண்டிய அனைத்தையும் பரக்காட்டு பகவதி தந்தருளுவாள் என்கிற நம்பிக்கை இப்பகுதி மக்களிடத்தில் நிறைந்திருக்கிறது.

தல வரலாறு :

முன்பொரு காலத்தில் மூகாசுரன் எனும் அசுரனை அழிக்க முயன்றாள் துர்க்கா தேவி. ஆனால் அந்த அசுரனின் உடலில் இருந்து கீழே சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும், ஒரு அசுரன் தோன்றிக் கொண்டே இருந்தான். அந்த அசுரன்களை எல்லாம் தேவி அழித்துக் கொண்டேயிருந்தாள். அப்படித் தோன்றிய அசுரன்களில் ஒருவன் பெயர், ‘பரா.’ அவனைத் தேவி, தற்போது கோவில் கொண்டிருக்கும் காட்டுப் பகுதியில்தான் அழித்திருக்கிறாள்.

அதன் பின்னர், அவள் அங்கிருந்து பரச்சேரி என்னும் இடத்தில் சென்று அமர்ந்திருக்கிறாள். அந்த இடத்தில் தங்கியிருப்பதில் அவளுக்கு அதிருப்தி தோன்றியதால், அவள் அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல நினைத்தாள். அப்போது, உன்னிக்குமாரத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, நெற்கதிர்களைக் கொண்டு தீப்பந்தம் ஒன்றைத் தயார் செய்து கொடுக்க, அந்தத் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அங்கிருந்து கிளம்பி, தற்போதுள்ள பரக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் என்பது தல வரலாறு.

இது தவிர இங்கு பரக்காட்டு அம்மன் வந்து அமர்ந்ததற்கான செவி வழிக்கதைகள் இரண்டும் சொல்லப்படுகிறது. அவற்றையும் காண்போம்.

கதை ஒன்று :

பள்ளிக்காடி, பரக்காடி, குன்னைக்காடி மற்றும் கொடிக்காடி ஆகிய நான்கு தேவியர்கள், திருவடி என்ற இடத்தில் இருந்து தங்களுக்கேற்ற இடத்தைத் தேடிச் செல்லத் தொடங்கினர். அவர்களது நீண்ட பயணத்திற்குப் பின்பு, பள்ளிக்காடி தேவிக்குப் பருவச்சேரி என்ற இடம் பிடித்துப் போக அங்கேயேத் தங்கிக் கொண்டாள். குன்னைக்காடி தேவி தென்னிலாபுரம் என்ற இடத்திலும், கொடிக்காடி தேவி வடக்கஞ்சேரியிலும் தங்கிக் கொண்டனர்.

கடைசியாக, பரக்காடி தேவி பரயா என்ற இனத்தவர் வசித்த பகுதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கினாள். அங்கிருந்தவர்களிடம் அவள், தனக்குப் பூஜை மற்றும் வழிபாடுகளைச் செய்து விழாக்கள் எடுத்துக் கொண்டாடும்படி சொன்னாள். ஆனால், அங்கிருந்த ஏழை மக்கள், நாங்கள் பூஜை மற்றும் வழிபாடுகளைச் செய்ய முடியாத நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம். எங்களால் பணம் செலவழித்துப் பூஜை வழிபாடுகளைச் செய்ய இயலாது என்று தெரிவித்தனர்.

அதனைக் கேட்ட தேவி, அவர்களிடம் குழல் என்னும் ஒரு இசைக்கருவியும், அதனுடன் சேர்ந்திசைக்கும், சில கூடுதல் இசைக்கருவிகளையும் கொடுத்து, அதனைக் கொண்டு இசைத்தால், வழிபாட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருளுதவியும் கிடைக்கும் என்று சொன்னாள். அதனைப் பெற்றுக் கொண்ட மக்கள் அப்படியேச் செய்வதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதன் பிறகு, தேவி அங்கிருந்து புறப்பட்டுத் தற்போதிருக்கும் இடத்திற்கு வந்து கோவில் கொண்டாள் என்று மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

கதை இரண்டு :

பரக்காட்டு தேவி அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்து கொண்டிருந்த போது, சக்தி மிகுந்த ரக்சா ஒன்றை அணிந்திருந்த மந்திரவாதி ஒருவன் தேவியைச் சந்தித்தான். அவன் தேவியை மிரட்டி, தான் வைத்திருந்த மீன் கூடையை எடுத்துக் கொண்டு, தன்னுடன் மீன் பிடிக்க வரும்படி சொல்லி அவளை அழைத்தான். அவன் அணிந்திருந்த சக்தி மிகுந்த ரக்சாவிற்குக் கட்டுப்பட்ட தேவியும், வேறு வழியின்றி அவனுடன் சென்றாள்.

குளங்கரா இல்லத்தைச் சேர்ந்த சாத்து அம்மாமன் எனும் அந்த மந்திரவாதி, மற்றொரு நாள் மீன் பிடிக்கச் சென்ற போது, அவன் அணிந்திருந்த ரக்சாவைத் தொலைத்து விட்டான். அந்நிலையில், தேவி அவனை அழித்து, அவனது உடலை 18 துண்டுகளாகப் பிரித்து அப்பகுதியில் வீசி எறிந்தாள். அதன் பிறகு, தற்போதிருக்கும் இடத்தில் தேவி கோவில் கொண்டாள் என்றும் சொல்கின்றனர்.



கோவில் அமைப்பு :

காவச்சேரி பசுமைக் காடுகளின் நடுவில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மரத்தால் செய்யப் பெற்ற பரக்காட்டு பகவதி தேவி வடக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆலய வளாகத்தில், மகாகணபதி, நாகர் உள்ளிட்ட சில தெய்வங்களுக்கான சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவராத்திரி நாட்கள், ஐயப்பனுக்குரிய மண்டல நாட்கள் மற்றும் அம்மனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கேரள மக்களால் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் கோவில் வளாகத்தில் ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும். இங்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் கதிர்வேலா, கார்த்திகை மாதத்தில் மண்டலம் களமெழுத்துப் பாட்டு, தை மாதத்தில் பொன்னின் பூவு, மாசி மாதத்தில் கூத்து, வைகாசி மாதத்தில் ஆலுவேலா, ஆனி மாதத்தில் தாலப்பொலி, ஆடி மாதத்தில் ஈஸ்வர சேவா எனும் வேறு சில விழாக்களும் நடக்கின்றன.

பரக்காட்டு பகவதி தேவி ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள், அத்திப்பேட்டிலுள்ள தனது சகோதரியான மாங்கோட்டு பகவதி கோவிலுக்குச் சென்று விடுகிறார். இந்நாட்களில், பரக்காட்டு பகவதி கோவிலில் வழிபாடு இருக்காது.

பரக்காட்டு தேவி கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையுடன் கோவிலுக்கு வந்து, ‘குரவா’ எனும் ஒலி எழுப்பி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பூரம் திருவிழா :

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நடசத்திர நாளில் தொடங்கி பூரம் நட்சத்திரம் நாள் வரையிலான ஏழு நாட்கள் ‘பூரம் திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவினை இங்குள்ளவர்கள் ‘மாமாங்கம்’ என்று சொல்கின்றனர். இவ்விழாவின் போது, கேரள மரபு வழியிலான பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம், குத்துவிளக்கு புறப்படல், இரட்டை தாயம்பகா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. இவ்விழாவில் குதிரை உருவப் பொம்மை அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், அம்மனால் அழிக்கப்பட்ட மந்திரவாதி சாத்து அம்மாமன் உடல் விழுந்ததாகச் சொல்லப்படும் 18 இடங்களிலும், பூரம் நட்சத்திர விழாவிற்கு முந்தைய ஏழு நாட்கள் கொடி மரங்கள் நடப்படுகின்றன. அந்தக் கொடி மரங்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் குளங்கரா இல்லத்தைச் சேர்ந்த பெண்கள் சூழ தேவியின் சிலையைக் கொண்டு சென்று, சாத்து அம்மாமன் செயல்பாட்டுக்குப் பரிகாரமாக வழிபடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனை ‘ஊர்வலம்’ என்று சொல்கின்றனர். உன்னிக்குமாரத்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இந்த ஊர்வலத்தின் முன்பாக ஜோதியை எடுத்து செல்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து 22 கிலோமீட்டர், ஆலத்தூர் என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்உள்ள காவச்சேரியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல பாலக்காடு நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தேனி மு.சுப்பிரமணி
Tags:    

Similar News