செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-12-01 09:37 GMT   |   Update On 2020-12-01 09:37 GMT
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்தது.
திருச்சி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 100-ஐ தாண்டி இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு கட்டுக்குள் வந்து நாளொன்றுக்கு சராசரியாக 20 முதல் 25 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து இருந்தாலும், அதில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆய்வகத்தில் தினமும் 1, 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 305 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 30 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் லட்சுமி கூறியதாவது:-

திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பாதிப்பு 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும் குளிர்காலத்தில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெயில் காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரிதாக இருக்காது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் மாறாக, வெயில் காலத்தில் அதிகமானோருக்கு தொற்று பரவியது.

தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருவதைக் கண்டு அலட்சியமாக இருக்காமல், வரும் நாட்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News