உள்ளூர் செய்திகள்
சிவன்

தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் மனித சமூகம் இனி இயங்க முடியாது- சிவன் பேச்சு

Published On 2022-05-07 05:45 GMT   |   Update On 2022-05-07 05:45 GMT
இந்தியாவில் பிறந்த விக்ரம் சாராபாய், அதனை மனிதனுக்கு பயன்படக் கூடிய அளவுக்கு மாற்ற வேண்டும் என சிந்தித்தார். இன்று இந்த விண்வெளி ஆராய்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது.

கிள்ளியூர்:

குமரி மாவட்டம் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 1ந் தேதி தொடங்கியது. 6ம் திருநாளான நேற்று சமய மாநாடு நடந்தது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஐ.எஸ்.ஆர்.ஓ. என்றால் அனைவருக்கும் ராக்கெட் விடுவது பற்றி தான் தெரியும். ஆனால் அதன் பின்னால் இருக்கக்கூடிய பயன்கள் யாருக்கும் தெரியாது. 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பிற நாடுகளை அழிக்கக் கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடித்தார்கள்.

ஆனால் இந்தியாவில் பிறந்த விக்ரம் சாராபாய், அதனை மனிதனுக்கு பயன்படக் கூடிய அளவுக்கு மாற்ற வேண்டும் என சிந்தித்தார். இன்று இந்த விண்வெளி ஆராய்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது.

நம்முடைய நாட்டில் இருந்து விடக்கூடிய ராக்கெட்டுகள் செயற்கை கோள்களை சுமந்து சென்று தகவல் தொழில்நுட்பத்தை நம் கையில் வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையை கூட தகவல் தொழில் நுட்பம் தீர்மானிக்கிறது.

செயற்கைக்கோள்களின் துணைஇல்லாமல் இன்று ஒரு மனிதனால் அரை மணிநேரம் கூட வாழ முடியாது. இன்று உலக நடப்புகளை அறிந்து விட முடியும் தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் மனித சமூகம் இனி இயங்க முடியாது.

செயற்கைக்கோள் வருவதற்கு முன்னால் புயல் இயற்கை சீற்றங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பது வழக்கம். ஆனால் செயற்கைக்கோள் உள்ளே வந்த பின்னர் புயல் வீசுவதற்கு ஒரு வாரம் முன்பே புயல் வீசும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு விடப்படுகிறது. இதன்மூலம் உயிர் பலி எண்ணிக்கை இன்று மிக குறைந்துள்ளது.

அதேபோல் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அவர்களுக்கு வழங்கியுள்ள சேட்டி லைட் கருவியினால் மீன் எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டறிய முடியும். எல்லை தாண்டி படகுச் சென்றாலே எச்சரிக்கை விடுக்கிறது.

மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையையும் இன்று விண்வெளித்துறை தீர்மானிக்கிறது. பிரதமர் மோடியின் முயற்சியினால் இன்று முன்னேற்றம் அடைந்து உள்ளோம். இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட 55 செயற்கைக்கோள்கள் நம்முடைய நாட்டை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. விண்வெளியிலிருந்து பூமியை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

விண்வெளிதுறை ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். அவர்கள் விரும்பிய பாடங்களை தான் படிக்க வேண்டும். பெற்றோர் திணிப்பை ஏற்று பாடங்களை படிக்க கூடாது. மாணவர்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

விரும்பியது கிடைக்க வில்லை என்றாலும் மாணவர்கள் கவலைப்படக் கூடாது. கிடைத்ததை வைத்து திருப்தியடைய வேண்டும். நமக்கு கிடைத்ததில் நாம் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் தான் மாணவ சமூகம் இனி வளர்ச்சி அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News