செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக பட்ஜெட்டை எடியூரப்பா இன்று தாக்கல் செய்கிறார்

Published On 2021-03-08 01:45 GMT   |   Update On 2021-03-08 01:45 GMT
2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பஸ் கட்டணம் உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு :

2021-22-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. பெங்களூரு விதான சவுதாவில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா இந்த பட்ஜெட்டை பகல் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எடியூரப்பாவே கூறியுள்ளார். மேலும் விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநில அரசின் வரி வருவாய் குறைந்துவிட்டது. மத்திய அரசும், சரக்கு-சேவை வரி திட்டத்தில் கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை முழுமையாக வழங்கவில்லை. இதனால் கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக சில புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக டீசல் விலை உயர்வு, கொரோனா பயத்தால் பயணிகள் எண்ணிக்கை குறைவு போன்றவற்றால் அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் போக்குவரத்து கழகங்கள் நெருக்கடியில் உள்ளன. அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று பேசப்படுகிறது.

தலைநகர் பெங்களூருவுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான திட்டங்கள் இடம்பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மொத்தத்தில் எடியூரப்பா இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது பொதுமக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News