செய்திகள்

கவுந்தப்பாடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் பணம்-நகை கொள்ளை

Published On 2019-02-12 11:03 GMT   |   Update On 2019-02-12 11:03 GMT
கவுந்தப்பாடி அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் பணம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவரத்தினம் (வயது 65). ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அலுவலர். இவரது மனைவி சாந்தா (55).

இவர்களின் மகன் தமிழ்செல்வன் (35) கோவை விமான நிலையத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இன்னொரு மகன் மாதேஸ்வரன் (34) பெங்களூரில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளனர்.

நவரத்தினம் கடந்த 8-ந் தேதி கோவையில் உள்ள மகனை பார்க்க சென்றார். பிறகு அங்கிருந்து தனது மகனை அழைத்து கொண்டு பெங்களூர் சென்றனர். 10-ந் தேதி கோவை வந்து அங்கு மகனுடன் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நவரத்தினம் வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். வீட்டில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன.

இன்று நவரத்தினம் வீட்டின் கதவு திறந்து பொருட்கள் சிதறி கிடந்தது. இதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவையில் உள்ள நவரத்தினத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. கோபி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால முரளி சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை டி.எஸ்.பி. ரஜனிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News