செய்திகள்
திருமாவளவன்

பெகாசஸ் விவகாரம்: விடுதலைச்சிறுத்தைகள் வழக்கு தொடர முடிவு - திருமாவளவன் அறிக்கை

Published On 2021-10-10 09:57 GMT   |   Update On 2021-10-10 09:57 GMT
பெகாசஸ் விவகாரத்தில் வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்க மறுத்து விட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை:

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாக செயல்பட்ட இந்திய உள்துறையின் இந்நாள், முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு அனுமதி கேட்டு இந்திய அட்டர்னி ஜெனரலுக்கு 13.08.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

அதற்கு பதில் அளித்து அட்டர்னி ஜெனரல் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“பெகாசஸ் குழுமத்துக்கு எதிராகவும் அதன் இயக்குநர்கள், இந்திய உள்துறையின் தற்போதைய செயலாளர் அஜய் பல்லா, முன்னாள் செயலாளர் ராஜிவ் கவுபா ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம்,1971 பிரிவு 15-ன் கீழ் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

13.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் நான் கவனமாக ஆராய்ந்தேன். நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971-ன் கீழ் எனது ஒப்புதலுக்காக உங்கள் கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளீர்கள்.


இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறதா அவ்வாறெனில் யாருக்கு எதிராகப் பயன்படுத்தியது என்பது விவாதத்துக்குரியதாகவும், தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வெளிப்படையாக பேசப்பட முடியாததாகவும் உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பளிக்காத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971-ன் பிரிவு 15-ன் கீழ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கு நான் ஒப்புதல் அளிப்பது பொருத்தமற்றது.

எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டம்,1971 இன் பிரிவு 15 இன் கீழ் வழக்கு தொடுக்க நான் அனுமதி மறுக்கிறேன் என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்க மறுத்து விட்டதால் மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

Similar News