செய்திகள்
கைது

அரக்கோணம் அருகே இரட்டைக்கொலையில் மேலும் 2 பேர் கைது

Published On 2021-04-09 08:39 GMT   |   Update On 2021-04-09 08:39 GMT
இரட்டைக்கொலை சம்பவத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் சோகனூரில் திரண்டு இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த சோகனூரை சேர்ந்த சூர்யா (வயது23). அர்ஜூன் (26) ஆகியோரை பெருமாள் ராஜப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கத்தி, கட்டை, பாட்டிலால் தாக்கி நேற்று முன்தினம் இரவு கொலை செய்தனர்.

தேர்தல் தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோகனூர் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, ராணிப்பேட்டை எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் ஒரு பிரிவினர் அடிக்கடி எங்களை தாக்குகின்றனர். எனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதன் பின்னரே மறியலை கைவிடுவோம். பிணங்களை வாங்கிக்கொள்வோம் என ஆவேசமாக கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர்.

கண்டிப்பாக குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் சம்பவத்தால் சாலை கிராமம் கூட்ரோடு - திருத்தணி சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கொலை வழக்கு தொடர்பாக பெருமாள் ராஜப்பேட்டையை சேர்ந்த அஜித் (24), மதன் (37), சுரேந்தர் (24), நந்தா (20) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக் (23), சத்யா ஆகிய 2 பேரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 4 தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றுகூறி அப்பகுதி மக்கள் சோகனூரில் திரண்டு இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். கொலையான 2 பேர் உடலையும் வாங்க மறுத்து திருத்தணி ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சோகனூர், பெருமாள் ராஜப்பேட்டை, சாலை, குருவராஜப்பேட்டை பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News