செய்திகள்
செங்குளத்தில் பறிக்கப்படாமல் உள்ள தாமரை பூக்கள்.

செங்குளத்தில் பறிக்கப்படாமல் வீணாகும் தாமரை பூக்கள்

Published On 2021-05-17 07:41 GMT   |   Update On 2021-05-17 07:41 GMT
கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் செங்குளத்தில் தாமரை பூக்கள் பறிக்கப்படாமல் வீணாகி வருகின்றன.
உடுமலை:

பூக்களை பொதுவாக கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ என்று 3 வகைகளில் குறிப்பிடுவார்கள். இதில் நீர்ப்பூக்களில் சிறந்த இடம் தாமரைக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த தாமரை பூக்கள் உடுமலையையடுத்த செங்குளம் பகுதியில் தற்போது பறிக்க ஆளில்லாமல் பூத்துக் கிடக்கிறது. ஏழு குள பாசனப் பகுதிகளில் ஒன்றான செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 

திருமூர்த்தி அணையிலிருந்து இந்த குளத்துக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் இருக்கும். இதனால் இந்த குளத்தின் ஒரு பகுதியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. 
இந்த பூக்கள் ஒரு சில குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.குளத்தில் பூத்துள்ள தாமரை பூக்களை பறித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இவர்களிடமிருந்து வாங்கி செல்லும் சில்லறை வியாபாரிகள் கோவில் வாசல்கள் மற்றும் கடைகளில் விற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் தாமரை பூக்களை வாங்குவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். 

இதுகுறித்து தாமரை சேகரிப்போர் கூறியதாவது:-

செங்குளம் மற்றும் செட்டிக்குளங்களில் தாமரை விதைகள் தூவப்பட்டதால் அதிக அளவில் முளைத்துள்ளது. இந்த குளங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் போது தாமரை பூக்களை சேகரித்து விற்பனை செய்வோம். தண்ணீர் குறைந்து விட்டால் தாமரைக் கிழங்குகளை சேகரித்து விற்பனை செய்வோம். ஆனால் தாமரைப் பூக்களைப் பொறுத்தவரை இறை வழிபாட்டுக்கானதாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தாமரைப் பூக்கள் மற்றும் தண்டுகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை.இதனால் தற்போது பூக்களை விற்பனை செய்வது சிரமமான விஷயமாக உள்ளது.

எனவே பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டோம். இதுதவிர தாமரை இலையில் சாப்பிட்டால் நரை விரைவில் வராது என்பார்கள். கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தாமரை இலையை உணவருந்த பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தாமரையின் பயன்களை மக்கள் அறிந்துகொண்டால் எல்லா காலங்களிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும் என்றனர்.
Tags:    

Similar News