உள்ளூர் செய்திகள்
மாடு விடும் விழாவில் சீறி பாய்ந்து சென்ற காளை.

வேலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2022-01-15 09:05 GMT   |   Update On 2022-01-15 09:05 GMT
வேலூர் மாவட்டத்தில் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பங்கேற்பவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு விழாவிலும் 100 காளை, 150 வீரர்களுக்கு மிகாமலும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இன்று காளை விடும் விழா தொடங்கியது. வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு, அணைக்கட்டு அருகே உள்ள சிவநாதபுரம், கே.வி.குப்பம் பனமடங்கி, குடியாத்தம் குட்லவாரிபல்லி ஆகிய கிராமங்களில் இன்று மாடு விடும் விழா நடந்தது.

கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கிடையில் ஓடு பாதையில் நின்றிருந்த பலரையும் காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரி பல்லி கிராமத்தில் 107-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன.

இந்த காளைகளின் உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டிய பின்பு காளை விடும் திருவிழாவில் காளைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.

காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

மாடு விடும் விழா புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாடு விடும் விழாக்களை கண்காணித்தனர்.

மாடு விடும் விழா நடந்த கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
Tags:    

Similar News