செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி

Published On 2020-02-15 01:32 GMT   |   Update On 2020-02-15 01:32 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட போலீஸ் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

ஆனாலும், தலிபான்களுடன் இன்னும் சில வாரங்களில் அமைதி உடன்படிக்கை எட்டப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.    

தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். 

இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக தலிபான் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சக வீரர்கள் மீதே அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் குண்டூஸ் மாகாணம் இமாம் ஷாகிப் மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ் தலிபான் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வழக்கம்போல நேற்று சோதனைச்சாவடியில் பணியில் இருந்த அந்த போலீஸ் சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தில் அதே குண்டூஸ் மாகாணத்தில் நேற்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். 

அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெறும் நிலையில் தற்கொலைப்படை தாக்குதல்களும், குண்டுவெடிப்பு சம்பவங்களும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News