செய்திகள்
தலிபான் படையினர்

பஞ்ச்ஷிர் மாகாண தலைநகருக்குள் நுழைந்துவிட்டோம் -தலிபான் அறிவிப்பு

Published On 2021-09-05 17:01 GMT   |   Update On 2021-09-05 17:01 GMT
பஞ்ச்ஷிர் மாகாண தலைநகர் பஜாரக்கை ஒட்டிய ருக்கா காவல் தலைமையகம் மற்றும் மாவட்ட மையம் தங்கள் வசம் வந்துவிட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள். அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள் தேசிய கிளர்ச்சி குழுவை ஒடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் தலிபான்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தலைநகருக்குள் நுழைந்துவிட்டதாக தலிபான்கள் இன்று கூறி உள்ளனர். மாகாண தலைநகர் பஜாரக்கை ஒட்டிய ருக்கா  காவல் தலைமையகம் மற்றும் மாவட்ட மையம் தங்கள் வசம் வந்துவிட்டதாகவும், எதிர் படைகள் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பஜாரக்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News