செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

Published On 2021-07-22 23:52 GMT   |   Update On 2021-07-22 23:52 GMT
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருக்கும் செய்தியில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:

கொரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி, கொரோனா வைரஸ் 2-வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மாநிலங்கள் அளிக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசு மேற்படி பதிலை கூறி உள்ளது. இதில் குறை காண்பதற்கு ஒன்றும் இல்லை. .

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருக்கும் செய்தியில் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழகம் ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் துரதிஷ்டவசமாக செங்கல்பட்டில் 13 பேர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



மு.க.ஸ்டாலின் இதுபோன்று குறிப்பிட்டு இருந்ததையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பேட்டியையும் ஒப்பிட்டு பார்த்தால் முரண்பாடு தெள்ளத்தெளிவாகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப 
தமிழக அரசால்
 தெரிவிக்கப்படும் அனைத்து புள்ளி விவரங்களும் இதுபோன்றுதான் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து உண்மையா? அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்த தகவல் உண்மையா? என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து உண்மை நிலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News