லைஃப்ஸ்டைல்
இளம்தலைமுறையை வதைக்கும் கஞ்சா

இளம்தலைமுறையை வதைக்கும் கஞ்சா: திருந்தினால் எதிர்காலம் சிறக்கும்

Published On 2021-10-29 03:33 GMT   |   Update On 2021-10-29 03:33 GMT
இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.
கண்ணே...மணியே...குலக்கொழுந்தே என்று வாரி அணைத்து முத்தமிட்டு சொர்க்கம் தன் கை அருகே இருப்பதாக பூரித்துத்தான் போவார்கள் பெற்றோர் தங்கள் குழந்தை முகத்தை பார்க்கையில். எதிர்காலத்தில் தனது மகனும், மகளும் சாதனைகள் பல படைத்து நம்மை வெற்றித்தேரில் அழைத்து செல்வார்கள் என்ற எண்ணம் குழந்தையை பெற்ற அத்தனை பெற்றோருக்கும் இருக்கும்.

பாதையை மாற்றும்

தத்தி தத்தி நடக்கும் நடையழகு முடிந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் காலம் வந்த போது, நமது குழந்தை இந்த சமுதாயத்தில் இருக்கும் கெட்டபழக்க வழக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூாடாதே என்ற கவலையும் பெற்றோரை வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. அவர்களது கவலையை பெருங்கவலையாக்கி விடுகின்றனர் சில இளைஞர்களும் இளம் பெண்களும்.

எந்த வகையில் வந்தாலும் போதை வஸ்து மனிதனின் மனதை மிருகமாக்கி விடும். சொல்லப்போனால் போகும் பாதையையே மாற்றி விடும். அந்த போதை வஸ்தை தேடி இன்றயை இளைய தலைமுறையினர் சிலர் ஓடிக்கொண்டிருப்பதுதான் சமுதாயத்தின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.

இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது போதை வஸ்த்துக்கள். இன்று பாமரனைத்தேடி ஓடி வந்து விட்டது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் வளர்ந்து இருப்பது காலத்தின் கொடுமை. ஆண் என்ன? பெண் என்ன? யார் செய்தாலும் போதை பழக்கம் கேடு தரத்தான் செய்யும்.

விழாக்களில் போதை விருந்து

பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆட்டிப்படைக்கும் இந்த போதை பழக்க வழக்கம் ஒரு சமூக நோயாகவே மாறியிருக்கிறது. கவலையை மறக்கவும், உடல் சோர்வு நீங்கவும் போதை பொருட்களை பயன்படுத்துகிறேன் என்பது தான் போதை அடிமைகள் சொல்லும் காரணம்.

தற்போதைய கால ஓட்டத்தில் பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வு, திருமணம் விழா, காதுகுத்து விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருவிழா, பண்டிகைகள் என எந்த சுக, துக்க நிகழ்வாக இருந்தாலும் அதில் முக்கிய இடம் வகிப்பது மது மற்றும் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தும் விருந்தாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், முதுகெலும்பாகவும் திகழக்கூடிய இளைஞர் சமுதாயம் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.

தேடி வரும் கஞ்சா

கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களை குறிவைத்தே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்தான், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாயைவிட இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்வதில் அதிக வருவாய் கிடைத்ததாக தெரிகிறது. இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா போதை மீது ஏற்பட்ட இனம்புரியாத ஆசையினால் வியாபாரிகள் கேட்ட பணத்தை கொடுத்து கஞ்சாவை வாங்கிச் சென்றதுதான் அதிக வருவாய் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் தேனி மாவட்டப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும் கஞ்சாவை பெரும் அளவில் வரவழைத்து விற்பனையை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகும் இளைஞர்கள் ஆங்காங்கே சிறு, சிறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பு மற்றும் வேலைகள் ஆகியவற்றில் இருந்து தடம்மாறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

போலீசாரின் வேட்டை

இதையறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் ரகசியமாக புலன் விசாரணை மேற்கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிபார்த்து வேட்டையாடினர். அதோடு மட்டுமில்லாமல் கஞ்சா போதையால் தடம் மாறும் இளைஞர்கள், மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் துணையோடு நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சத்தமின்றி மேற்கொண்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன. இதனால் கஞ்சா போதையில் இருந்து மீண்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை 228 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தக்கலை சப்-டிவிஷனில் அருமனை பகுதியில் மட்டும் 400 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் சிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ஏராளமானோரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட காவல்துறை என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வருகிறது.

நம்பிக்கை இருக்கிறது

இருப்பினும் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற திரைப்பட பாடலின் வரிகளுக்கு ஏற்ப கஞ்சாவை ருசிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் விழிப்புணர்வு பெற்று அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பெற்றோரின் இதயத்தை கையில் இருக்கும் கஞ்சா ெகாள்ளியால் சுட்ெடரிப்பதை கைவிட வேண்டும். எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கடந்து செல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே இந்த சமுதாயத்தின் அக்கறை. இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்தை பயன்படுத்தும் அனைவரும் அந்த தீய பழக்கத்தை கைவிட்டு சமுதாயத்தின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருந்தினால் மட்டுமமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
Tags:    

Similar News