சிறப்புக் கட்டுரைகள்
சீத்தளி மூச்சுப்பயிற்சி

ஆரோக்கியம் நம் கையில்- தலைமுடி உதிர்வைத் தடுக்கும் முத்திரை

Published On 2021-12-29 09:32 GMT   |   Update On 2021-12-29 09:32 GMT
தலை முடி கொட்டக்கூடாது. அதற்கு நமது யோகா நெறிமுறையை முத்திரையை காண்போம். பொதுவாக அதிகம் சிந்தித்தல், கவலை, கோபம், டென்‌ஷன், பதட்டப்படுதல் காரணமாக நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படும்.


1. வாய் நாக்கு நன்கு இயங்க: வாயில் துர்நாற்றம் வரும், வாயில் புண்கள் ஏற்படும். நாக்கில் புண்கள் ஏற்படும். இது வராமல் வாழ்வதற்கு யோகா நெறிமுறையில் நல்ல முத்திரைகள் உள்ளன.

மண்ணீரல் நன்கு இயங்கினால் நமது நாக்கில் புண்கள் வராது. வாய் துர்நாற்றம் ஏற்படாது. எனவே மண்ணீரலை திடப்படுத்தும் முத்திரை செய்தால் போதும்.



 

பிருதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை 20 வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிரவிரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

சீத்தளி மூச்சுப்பயிற்சி:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். வாயை விசில் மாதிரி வைத்து (அல்லது நாக்கு நுனியை விசில் மாதிரி மடித்து) வாய் வழியாக மூச்சை மெதுவாக இழுக்கவும். அப்பொழுது அடிவயிறு வெளியில் வர வேண்டும். உடன் வாயை மூடி மெதுவாக இருமூக்கு துவாரம் வழியாக மூச்சை வெளிவிடவும். அப்பொழுது வயிறு உள்ளே செல்ல வேண்டும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

பலன்கள்:பிரிதிவி முத்திரை மண்ணீரலை பலப்படுத்தும். சீத்தளி மூச்சுப்பயிற்சி உடல் உஷ்ணம் அதிகமாகாமலும் குடல் சூடு அதிகமாகாமலும் சமப்படுத்தும். அதனால் குடல் புண்கள் வராது. வாய் புண்கள், உதட்டில் புண்கள், நாக்கில் புண்கள் வராமல் தடுக்கின்றது.

2.பற்கள் நன்கு இயங்க யோகமுறை: நமது உடலில் பற்கள் வலிமையாகவும், திடமாகவும் இயங்க வேண்டும். பற்களுக்கும் நரம்பு மண்டலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒருவரின் உடலில் பற்கள் உதிர்ந்தால் இதயம், மூளைப்பகுதி, நரம்பு மண்டலங்கள் ஒழுங்காக இயங்காது. எனவே ஒவ்வொருவரும் நமது பற்களை வளமாக இயங்க செய்யும் யோக நெறிமுறைகளை வாழ்வில் பயின்று பற்களை உறுதியாக இயங்கச் செய்ய வேண்டும்.

காலை:காலை எழுந்தவுடன் பற்களை நீங்கள் நவீன பேஸ்ட் பிரஸ்ஸில் விளக்கினாலும், வேப்பங்குச்சியால் பற்களை சுத்தப்படுத்துங்கள். வாரம் இரு நாட்கள் தண்ணீரில் கல் உப்பு போட்டு சுடவைத்து ஆறியவுடன் வாயில் தண்ணீரைவிட்டு நன்கு பற்கள் முழுவதும் பட செய்து கொப்பளிக்கவும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் இரு கரண்டி காலையில் வாயில்விட்டு நன்கு உமிழ்ந்து கொப்பளிக்கவும். வெந்நீரில் கொப்பளிக்கவும்.

மாதம் ஒருமுறை வேப்பங்கொழுந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து காலையில் பல் விலக்கிவிட்டு சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும்.

இப்பொழுது பற்கள் நன்கு இயங்கும் யோகா நெறிமுறைகள் பற்றி பார்ப்போம்.

கைவிரல் நுனிகளில் அழுத்தம்: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைவிரல் நுனிகளில் கட்டைவிரல் ஆள்காட்டி விரல் நுனிகளை மடித்து மூன்று முறைகள் ஒரு அழுத்தம் கொடுக்கவும். ஒவ்வொரு விரல் நுனிகளிலும் ஒரு சிறிய அழுத்தம் வலது கை இடது கை விரல்களில் கொடுக்கவும்.

சதந்தா நாடி சுத்தி பிராணாயாமம்: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கைகள் சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரல் ஆள்காட்டிவிரல் நுனியை இணைக்கவும்.

இரு பற்களையும் சேர்த்து வைத்து மூச்சை மெதுவாக இழுக்கவும். உடன் வாயை மூடி இரு மூக்கு துவாரம் வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும். இதேபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.

பிரிதிவி முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக் கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இரு கைகளிலும் செய்யவும்.

குறிப்பு:சாத்வீகமான உணவுகளை உண்ணவும். கீரை வகைகள், பழங்கள் உணவில் எடுக்கவும். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். இரவு படுக்கும் முன் ஒரு முறை பல் விலக்கிவிட்டு படுக்கவும்.

3 . தொண்டை தைராய்டு பாராதைராய்டு நன்கு இயங்க:- தொண்டை பகுதி குரல் வளமாக இருக்கும் உறுப்பு. நமது உடலில் நோய்க்கிருமிகள் தாக்காமல் இருக்க தொண்டைப் பகுதி நன்கு பிராண ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் தான் இரு முக்கிய நாளமில்லா சுரப்பிகள் சுரந்தால் தான் உடல், மன இயக்கம் நன்றாக இருக்கும்.

தைராய்டு அதிகமாக சுரந்தால் உடல் எடை குறையும். தைராய்டு குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகமாகும்.

தைராய்டு ஒழுங்காக இயங்கவில்லையெனில் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். கருப்பை நன்றாக இயங்காது புத்திர பாக்கியம் கிடைப்பதில் பிரச்சினை இருக்கும்.

எனவே தைராய்டு / பாரா தைராய்டை நன்கு இயங்க செய்யும் யோகா நெறிமுறைகளை சரியாக நாம் தினமும் பயில வேன்டும்.


 

சூன்ய முத்திரை: தரையில் ஒரு விரிப்பு விரித்து நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் நுனி உள்ளங்கையில் தொடட்டும். கட்டை விரலை நடுவிரலின் மத்தியில் தொடவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

ஜலேந்திர பந்தம்:நிமிர்ந்து சுகாசனத்தில் அமரவும். இரு கைகளும் சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உடன் குனிந்து முகத்தாடை தொண்டை பகுதியில் படும்படி அழுத்தம் கொடுக்கவும். மூச்சடக்கி பத்து வினாடிகள் இருக்கவும். மூச்சை வெளிவிட்டு நேராக வரவும். இதுபோல் ஐந்து முறைகள் காலை / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

பலன்கள்: தைராய்டு, பாரா தைராய்டு நன்கு சரியான விகிதத்தில் சுரக்கும். அதில் உள்ள குறைபாடுகள் நீங்கும். குரல் வளமாக இருக்கும். நோய்க்கிருமிகள் அண்டாது. தைராய்டு கட்டிகள் இருந்தால் தொடர்ந்து பயிற்சி செய்தால் கரைந்து விடும்.

4. தலைமுடி நன்கு வளர: தலை முடி கொட்டக்கூடாது. அதற்கு நமது யோகா நெறிமுறையை முத்திரையை காண்போம்.

பொதுவாக அதிகம் சிந்தித்தல், கவலை, கோபம், டென்‌ஷன், பதட்டப்படுதல் காரணமாக நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படும்.

பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்காமல் இருக்கும். உடல் சூடு அதிகமாகும். இதனால் முடி உதிரும் வழுக்கை ஏற்படும். இதனை சரி செய்யும் முத்திரை பார்ப்போம். வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கவும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை ஆழ்ந்த நித்திரை வேண்டும்.

சின் முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரல் கட்டைவிரலால் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். விரலால் நுனியில் சின்ன அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சில் கவனம் செலுத்தவும், இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

இந்த முத்திரை கவலை, பதட்டம், கோபம் முதலியவற்றை நீக்கும். மன அமைதி கிடைக்கும். இதன் மூலம் உடல் சூடு சமமாகும். அதிக சூட்டினால் முடி உதிர்வது சரியாகும்.

பிரசன்ன முத்திரை:விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை 20 வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் தவிர நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று படும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் நமது இதயத்தைப் பார்க்கும்படி இருக்கவேண்டும். இந்நிலையில் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.


 

பின் இதே முத்திரையில் நான்கு விரல்களின் நகங்களை பொறுமையாக உராய்வு கொடுக்கவும். நான்கு விரல்கள் கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்களின் நகங்களை ஒன்றையொன்று படும்படி உராய்வு கொடுக்கவும்.

சில ஒழுக்க நியதிகள்:தலைமுடி நன்கு வளர வாழ்வில் சில ஒழுக்க நியதிகளையும் கடைபிடிக்க வேண்டும். காலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு எளிய தியானம் பத்து நிமிடம், எளிய யோகாசனங்கள் பத்து நிமிடம், மூச்சு பயிற்சி, முத்திரைகள் பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.

இரவு சாப்பாடு 8 மணிக்குள் அரைவயிறு சாப்பிடவும். 10 மணிக்குள் இரவு படுத்துவிட வேண்டும்.

அதிக காரம், புளிப்பு குறைக்கவும், கீரை வகைகள், பல வகைகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு சைவச் சாப்பாடாக இருப்பது நலம். மைதாவினால் ஆன உணவுகளை தவிர்க்கவும். தினமும் தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும். இரவு பால் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Tags:    

Similar News