செய்திகள்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

சார்தாம் யாத்திரை நாளை ஆரம்பம் -உத்தரகாண்ட் முதல்வர் அறிவிப்பு

Published On 2021-09-17 10:09 GMT   |   Update On 2021-09-17 11:22 GMT
யாத்திரையில் பங்கேற்போர், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
டேராடூன்:

இந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த 4 தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர். யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள்.



அவ்வகையில் இந்த ஆண்டுக்கான யாத்திரை நாளை தொடங்குவதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். சார்தாம் யாத்திரைக்கான தடையை நைனிடால் உயர் நீதிமன்றம் நீக்கியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

யாத்திரையில் பங்கேற்போர், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

இதையடுத்து யாத்திரைக்கான ஆயத்தப் பணிகளை அரசு தொடங்கியது. சார்தாம் யாத்திரைக்கான ஆயத்தப் பணிகளை தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ்.எஸ்.சந்து ஆய்வு செய்து, சுற்றுலா மற்றும் தேவஸ்தான மேலாண்மை வாரியம் உட்பட பயணம் தொடர்பான பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வுகூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுவதால், சாலைகளை சீரமைப்பதற்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசால் வழங்கப்படும் புதிய நிலையான வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படும் என்று சமோலி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News