ஆன்மிகம்
வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

Published On 2019-07-08 04:28 GMT   |   Update On 2019-07-08 04:28 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

முன்னதாக நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பாவை சாற்று முறை, காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பெருமாள் புறப்பாடு நடந்து கோவில் கொடிமரத்தின் முன்பு வந்து நின்று அருள்பாலித்தார். அப்போது தேரளுந்தூர் கோசகன் பட்டாச்சாரியார் கொடியேற்றினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து செல்வர் புறப்பாடு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 2-வது நாளான இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் விழாவான நாளை(செவ்வாய்கிழமை) காலை 7 மணிக்கு பல்லக்கில் ராஜகோபாலன் அலங்காரத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 7 மணிக்கு புண்ணியகோடி வாகனத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் அலங்காரத்திலும், இரவு 7 மணிககு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் அலங்காரத்திலும், வருகிற 11-ந் தேதி(வியாழக்கிழமை) பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் வீதி உலா மற்றும் ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

இதைத் தொடர்ந்து வருகிற 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், பூர்ணாஹூதி உள்ளி்ட்ட வழிபாடுகளும், 13-ந் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.
Tags:    

Similar News