செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது - 37 பேர் குணம் அடைந்தனர்

Published On 2020-03-24 06:13 GMT   |   Update On 2020-03-24 06:13 GMT
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டிய நிலையில் 37 பேர் குணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் திவிரப்படுத்தப்பட்டுள்ளன.இருந்தாலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா வைரசுக்கு நேற்று மேற்கு வங்காளம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் பலியாகினர். இதனால் இந்தியாவில் வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் மட்டும் 246 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 97 பேருக்கும், கேரளாவில் 92 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் 2 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த குழந்தையின் தாத்தா ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக கடந்த 7-ந்தேதி இந்தியா திரும்பி இருந்தார். அவர் கடந்த புதன்கிழமை மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்நிலையில்தான் 2 வயதான அவரது பேத்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதோடு சேர்த்து பஞ்சாப்பில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மணிப்பூரில் 23 வயது பெண் ஒருவருக்கும், சதீஷ்கரில் 80 வயது மூதாட்டிக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மேலும் 4 பேரை வைரஸ் தாக்கியதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 30 பேர், குஜராத்தில் 30, பீகாரில் 2, சதீஷ்கரில் 1, அரியானாவில் 26, ராஜஸ்தானில் 32, உத்தரபிரதேசத்தில் 32, மேற்கு வங்கத்தில் 7, லடாக்கில் 13, தமிழ்நாட்டில் 12, சண்டிகாரில் 76, ஆந்திராவில் 7, ஜம்மு காஷ்மீரில் 4, உத்தரகாண்டில் 5, இமாச்சல பிரதேசத்தில் 3, பீகாரில் 2, ஒடிசாவில் 2 பேர், புதுச்சேரி ஒருவர் உள்பட இன்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டி உள்ளது.

இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை வரை இந்தியா முழுவதும் விமானங்களில் வந்த 15 லட்சத்து 25 ஆயிரம் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் 451 பேர் இந்தியர்கள் ஆவார்கள். 41 பேர் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

வைரசால் பாதிக்கப்பட்ட 9 பேர் இறந்துள்ளனர். அதேநேரம் பாதிக்கப்பட்ட 37 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News