செய்திகள்
கோப்பு படம்.

மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை

Published On 2021-01-27 14:09 GMT   |   Update On 2021-01-27 14:09 GMT
குன்னூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி வினோத் (34). ஏற்கெனவே திருமணமான இவர் சமையல் கலைப் படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் 12-ம் வகுப்புப் படித்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் கர்ப்பமான மாணவியின் கருவைக் கலைக்க மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பின்னர் மீண்டும் திருமண ஆசை வார்த்தை கூறி, தொடர்ந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், பெற்றோருடன் சென்று உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மைனர் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண்டனி வினோத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், ஆண்டனி வினோத்துக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகர் கூறும்போது ''போக்சோ சட்டத்தில் இதுதான் அதிகபட்ச தண்டனை. வேறு எங்கும் இத்தனை ஆண்டுகள் தண்டனை வழங்கப்படவில்லை. மைனர் பெண்ணின் கருவைச் சேகரித்து அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி நிரூபித்ததை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News