செய்திகள்
உத்தரகாண்ட் முன்னாள் முதல்மந்திரி ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட்: ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி மீது சிபிஐ வழக்கு பதிவு

Published On 2019-10-23 13:41 GMT   |   Update On 2019-10-23 13:41 GMT
உத்தரகாண்ட்டில் ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் முன்னாள் முதல்மந்திரி ஹரிஷ் ராவத் மீது சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குளறுபடி காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முன்னதாக, சட்டசபையில் காங்கிரஸ் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் கடந்த மார்ச் 28-ந்தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநில கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்க பத்திரிகையாளர் ஒருவருடன் பேரம் பேசும் முயற்சியில் ஹரிஷ் ராவத் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் இதை போலி சி.டி. என்று மறுத்த ராவத், பின்னர் அதில் இருப்பது நான்தான் என்பதை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு ஜனாதிபதி ஆட்சியின் போது அனுமதி வழங்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த சிபிஐ தனது முதல்கட்ட தகவல் முடிவுகளை உத்தரகாண்ட் ஐக்கோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த ஐக்கோர்ட் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிஐ-க்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஆட்சியை கைப்பற்ற குதிரை பேரம் நடத்திய புகாரில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்மந்திரி ஹரிஷ் ராவத் மீது சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News