செய்திகள்
போலீசார் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- மேலும் 3 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை

Published On 2021-01-08 08:45 GMT   |   Update On 2021-01-08 08:45 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இதுபோன்று பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி லேப்-டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். மேலும் சபரிராஜனை காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், சபரிராஜன், தனது நண்பர்களான முன்னாள் அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளரான அருளானந்தம், பைக் பாபு, ஹெரன் பால் ஆகியோருடன் சேர்ந்து 2 பெண்களை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது. அதன்பேரில் சி.பி.ஐ.போலீசார் அந்த பெண்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.

தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அருளானந்தம் உள்பட 3 பேரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இறுதியில் கடந்த 5-ந் தேதி நள்ளிரவில் அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான அருளானந்தம் உள்பட 3 பேரின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சேகரித்தனர். இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியிலேயே முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பாக அருளானந்தத்தின் நண்பர்கள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் பெயர் விவரங்கள் குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையின் முடிவில் அவர்கள் கைதாக வாய்ப்பிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது. மேலும் 3 பேர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News