செய்திகள்
ஏவுகணை சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Published On 2021-09-15 05:41 GMT   |   Update On 2021-09-15 05:41 GMT
வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அதன் மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
சியோல்:

வட கொரியா அரசு நீண்ட தூரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து அவற்றை சோதனை செய்கிறது. அவ்வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

இந்த சோதனை குறித்து தென்கொரியா கவலை தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை கொண்ட இரண்டு ஏவுகணைகளை வடகொரியா மத்திய தீவு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையில் கடலுக்குள் செலுத்தி சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவ தளபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தென் கொரியா மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக விரிவான பகுப்பாய்வை நடத்துவதாகவும் கூறி உள்ளனர்.

சீன வெளியுறவு மந்திரி வாங் யி, சியோலுக்குச் சென்று தென்கொரிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அதன் மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை முற்றிலுமாக கைவிடாததால், அதன் மீதான பொருளாதார தடை நீடிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான அணுஆயுத திட்டம் குறித்த பேச்சுவார்த்தையும் முடங்கியது.

Tags:    

Similar News