செய்திகள்
திஷா ரவி

திஷா ரவி வழக்கு... டெல்லி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-02-19 10:21 GMT   |   Update On 2021-02-19 10:21 GMT
திஷா ரவி வழக்கில் ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, விசாரணை விவரங்களை யாருக்கும் கசியவிடக்கூடாது என்று டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது தனிப்பட்ட உரையாடல் குறித்த தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திஷா ரவி சம்பந்தப்பட்ட விசாரணை விவரங்கள் எதையும் காவல்துறை கசியவிடவில்லை என்றும், மனுதாரர் தவறான தகவலை கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எதிர்மனுதாரர்கள் விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், டெல்லி காவல்துறை விசாரணை விவரங்களை கசியவிடக்கூடாது என்றும், பிரமாண பத்திரத்தில் கூறியதை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது. 

மனுதாரரின் தனியுரிமைக்கான உரிமை, பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.
Tags:    

Similar News