ஆன்மிகம்
குருவித்துறை குருபகவான் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2019-10-30 03:46 GMT   |   Update On 2019-10-30 03:46 GMT
சோழவந்தானை அடுத்த பிரசித்திபெற்ற குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த வைகை ஆற்றங்கரையில் குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற சித்திரரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒருவரான சக்தி வாய்ந்த குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான், சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். குருப்பெயர்ச்சியையொட்டி ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். இதேபோல் இதுவரை விருச்சிக ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று அதிகாலை 3.49 மணி அளவில் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதேபோல் குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 4 நாட்கள் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கி தினந்தோறும் லட்சார்ச்சனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய பரிகார யாக வேள்வியை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாதன் பட்டர், சடகோப பட்டர், ராஜா பட்டர் உள்பட 20 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி நடத்தினர்.

அதன் பின்னர் அதிகாலை 3.49 மணிக்கு குருபகவானுக்கு திருமஞ்சன திரவியங்கள், பால் உள்பட 12 வகை அபிஷேகம் நடைபெற்று, பின்னர் மகா அபிஷேகம் நடந்தது. அதன்பின் பக்தர் களுக்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருவித்துறை கோவிலில் குவிந்தனர். அவர்கள் குறை தீர்க்கும் குன்றாக விளங்கும் குரு பகவானை தரிசனம் செய்தனர்.

முன்னதாக பக்தர்களின் வசதிக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குருவித்துறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜெயதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆலய பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அனிதா, துணை சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ், ராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர். 
Tags:    

Similar News