செய்திகள்
கோப்புபடம்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2020-11-07 16:27 GMT   |   Update On 2020-11-07 16:27 GMT
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின் பேரில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் விஜயகுமார் தலைமையில் கூட்டுறவு சார் பதிவாளர் ராணி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தாவளத்தில் இருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட்டை நிறுத்தினர். ஆனால் அதிகாரிகளை பார்த்ததும் மொபட்டை நிறுத்தி விட்டு, அதில் வந்தவர் தப்பி ஓடினார். இதையடுத்து அதிகாரிகள் அருகில் வந்து பார்த்தபோது மொபட்டில் இருந்த 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் மற்றும் 300 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று குடிமைப்பொருள் அதிகாரிகள் நடுப்புணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மொபட்டில் வந்தவர் தப்பி ஓடி விட்டார். ஆனைமலை குடிமைப்பொருள் அதிகாரிகள் மீனாட்சிபுரத்தில் இருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மொபட்டில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 3 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News