செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை, பணம் திருட்டு

Published On 2020-11-22 17:32 GMT   |   Update On 2020-11-22 17:32 GMT
விழுப்புரம் அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் சிவசண்முகா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர் புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவருடைய மனைவி தமிழ்செல்வியும் (50) கடந்த 19-ந் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு திருவெண்ணெய்நல்லூர் அருகே அரும்பட்டில் உள்ள மூத்த மகன் சிலம்பரசன் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அரும்பட்டில் இருந்து நேற்று பகல் 12.50 மணியளவில் இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 12 பவுன் நகை, 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சேகர், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3¼ லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News