செய்திகள்
வலையபூக்குளம் கிராமத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கமுதி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-18 09:40 GMT   |   Update On 2020-11-18 09:40 GMT
கமுதி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
கமுதி:

கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை மற்றும் கழிவுகள் அந்தந்த வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சேகரிக்கப்படுகிறது இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள் திடக்கழிவு மேலாண்மை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.

மேலும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கமுதி பகுதியில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்தார். அவர் திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் செயல்பாட்டினை நேரில் சென்று பார்வையிட்டார்.பின்னர் குடிநீர் வினியோகம் குறித்து அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் கமுதி பேரூராட்சிக்குட்பட்ட எல்.எப் ரோடு சாலைத் தெருவில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டார். அதன்பிறகு கமுதி ஊராட்சி ஒன்றிய வலையபூக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு அங்கு பணியாற்றிய தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் கமுதியில் உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கின் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு), மாடசாமி, சுந்தரராஜ் கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, தாசில்தார் செண்பக லதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாத்துரை, தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News