செய்திகள்
நீலகிரி கலெக்டர்

பொதுமக்களின் விழிப்புணர்வு-அதிகாரிகளின் ஈடுபாட்டால் இலக்கை எட்ட முடிந்தது: நீலகிரி கலெக்டர்

Published On 2021-09-14 05:56 GMT   |   Update On 2021-09-14 05:56 GMT
தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கியதால் இலக்கை எட்ட முடிந்ததாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 24 ஆயிரத்து 748 பேர் ஆகும். இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். இதில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 3 மாத காலத்துக்குள் உள்ள 6 ஆயிரத்து 277 பேரை தவிர்த்து மீதமுள்ள 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை 100 சதவீதம் போட்டுக்கொண்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த சாதனை குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதால் தான் இந்த இலக்கை அடைய முடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை அடைய சிறப்பாகப் பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி.

அதேபோல, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த 2-ம் தவணை தடுப்பூசியையும் முழுமையாக செலுத்திக்கொண்டால் நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக்கொண்ட முதல் மாவட்டமாக மாறும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கியதால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News