செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

Published On 2021-01-18 19:25 GMT   |   Update On 2021-01-18 19:25 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அது, பா.ஜனதாவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
நந்திகிராம்:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, மம்தா பானர்ஜி, புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டசபை தொகுதியில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இந்த தொகுதி, கடந்த 2000-ம் ஆண்டுகளில், கம்யூனிஸ்டு ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக நடந்த போராட்டங்களால் பிரபலமான தொகுதி ஆகும். அந்த போராட்டங்கள்தான், 2011-ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ஆட்சியை பிடிக்க உதவியது.

மேலும், இது, சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.

நந்திகிராமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

நான் எப்போதும் நந்திகிராமில்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். அந்த அளவுக்கு அது எனக்கு ராசியான தொகுதி.

வரும் சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போகிறேன். அதற்கு கட்சியின் மாநில தலைவர் சுப்ரதா பக்ஷி ஒப்புதல் அளிக்க வேண்டும். (மேடையில் இருந்த சுப்ரதா பக்ஷி உடனே ஒப்புக்கொண்டார்).

முடிந்தால், தற்போது நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பவானிப்பூர் (கொல்கத்தா) தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுவேன்.

சமீபத்தில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து வேறு கட்சிக்கு தாவியவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த கட்சியை தொடங்கியபோது அவர்கள் என்னுடன் இல்லை. தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் கட்சி தாவி உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ ஆகிக் கொள்ளட்டும். அதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், வங்காளத்தை பா.ஜனதாவிடம் விற்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Tags:    

Similar News