சிறப்புக் கட்டுரைகள்
ஸ்ரீமல்லய்ய சுவாமிகள்

சென்னை சித்தர்கள்: ஸ்ரீமல்லய்ய சுவாமிகள் - காரனோடை

Published On 2022-01-01 09:00 GMT   |   Update On 2022-01-01 09:00 GMT
ஏராளமான தத்துவங்களை அடிக்கடி சொல்லி தன்னை நாடி வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் ஸ்ரீமல்லய்ய சித்தர்.
எனக்கு கற்பூரம் வேண்டாம். கவலையை சொல். உன் குறைகளை தீர்க்க இந்த கரையில் நான் இருக்கிறேன். இந்த நாட்டில் இருள் இருக்க லாம். இதயத்தில் இருள் இருக்கக் கூடாது. மணலை உணவாகக் கொண்டவன் நான். உன்னிடமா எதையும் எதிர்பார்க்கப் போகிறேன்?

கடுகளவு கவலை இருந்தாலும் என்னிடம் விட்டுவிடு. யாரும் சிந்திக்கலாம். ஆனால் யாரையும் நிந்திக்கக் கூடாது. பாதைகள் பல இருப்பது போல வாழ்க்கைக்கும் பல வழிகள் உண்டு...

இப்படி ஏராளமான தத்துவங்களை அடிக்கடி சொல்லி தன்னை நாடி வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் ஸ்ரீமல்லய்ய சித்தர்.

இவர் எப்போதும் மண்ணைத்தான் உணவாக சாப்பிடுவது வழக்கம். யாராவது உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் அதையும் மண்ணில் போட்டு நன்றாக புரட்டி எடுத்துவிட்டுதான் சாப்பிடுவார். இதனால் இவரை ‘மண் உண்ட மகான்’ என்று எல்லோரும் அழைத்தனர்.

இவர் வழங்கிய அருள் உபதேசங்கள் கணக்கில் அடங்காதவை. ஆந்திராவை பூர்வீக மாகக் கொண்ட இவர், எப்போது சென்னைக்கு வந்தார்? எங்கெல்லாம் வாழ்ந்தார்? என்பது பற்றி யாருக்கும் தெரியாது. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் பேசும் ஆற்றலை இவர் பெற்று இருந்தார். அப்படியானால் இவர் இளம் வயதில் நன்கு கல்வி கற்றவராக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஆனால் மல்லய்ய சித்தர் இதுதொடர்பாக எந்தவொரு தகவலையும் யாரிடமும் சொன்னதே கிடையாது. இதனால் அவரது பூர்வீகம், அவரது பெற்றோர் மற்றும் அவரது வாழ்க்கைப் பயணங்கள் இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. சென்னை வாசிகள் தொடக்கத்தில் இருந்தே அவரை சித்தராகத்தான் பார்த்தனர்.

முதலில் அவர் ஜடாமுடி, தாடியுடன் சட்டை எதுவும் அணிந்து கொள்ளாமல் யாசகம் எடுத்து பிழைப்பவர் போல தெருக்களில் அலைந்ததால் அவரது அருமையை யாருமே உணரவில்லை. பொதுவாக மல்லய்ய சித்தர் யாரிடமும், எப்போதும், எதுவும் கேட்டதே கிடையாது. அதேபோல் யாராவது உணவு வாங்கிக் கொடுத்தாலும் உடனே வாங்கிக் கொள்ளமாட்டார்.

அவரது மனதுக்கு திருப்தி இருந்தால் மட்டுமே சிலரிடம் உணவை வாங்கியது உண்டு. சில சமயங்களில் அவரே யாரிடமாவது, ‘டீ வாங்கித் தாருங்கள், சிகரெட் வாங்கித் தாருங்கள்’ என்று கேட்பது உண்டு. அப்படி அவர் கேட்டு வாங்கிக் கொடுத்தவர்கள் பாக்கியசாலிகளாக மாறினார்கள்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் காரனோடை பகுதியில் அவர் நடமாடினார். அவர் மண் சாப்பிடுவதை பார்த்த சிலர், ‘‘ஏன் மண்ணை அள்ளி சாப்பிடுகிறீர்கள்?’’ என்று கேட்டால், ‘‘மண்ணின் சிறப்பை நீங்கள் உணர மாட்டீர்கள். உணர்ந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டீர்கள்’’ என்பார்.

சில ஆண்டுகள் காரனோடை, செங்குன்றம், ஜனப்பன்சத்திரம் பகுதிகளில் சுற்றித்திரிந்த மல்லய்யசித்தர் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒரு திருவிளையாடல் மூலம் தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். அதற்கு அவர் ஜெயராமன் என்பவரை பயன்படுத்தினார். ஜெயராமன் சென்னை சூளையில் வாழ்ந்த கோவிந்தநாயுடு, ராமலட்சுமி தம்பதியரின் மகன் ஆவார்.

முதலில் பால் வியாபாரம் செய்து வந்த ஜெயராமன் பிறகு லாரி ஓட்டும் பணியை மேற் கொண்டார். ஒரு நாள் அவர் ஜனப்பன்சத்திரம், கூட்டுசாலை பகுதியில் லாரியை ஓட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது வேறு ஒரு லாரியில் அடிபட்டு மல்லய்ய சித்தர் கால் எலும்பு முறிந்த நிலையில் சாலை ஓரம் கிடந்தார்.

அப்போது அவரை யாரோ ஒரு பிச்சைக்காரர் லாரியில் அடிபட்டு கிடக்கிறார் என்றுதான் ஜெயராமன் நினைத்தார். சித்தர் என்று அவருக்கு தெரியாது. என்றாலும், மல்லய்ய சித்தருக்கு உதவி செய்ய அவர் மனம் நினைத்தது. உடனே அங்கிருந்த ஒருவரது மாட்டு வண்டியில் ஏற்றி சித்தரை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். சித்தரின் எலும்பு முறிவுகளுக்கு கட்டுகள் போடப்பட்டன.

அதன் பிறகு அழிஞ்சிவாக்கம் அருகே உள்ள இருளிப்பட்டு கிராமத்தில் இருக்கும் தனது வீட்டுக்கு சித்தரை, ஜெயராமன் அழைத்து வந்தார். தனது வீட்டில் தங்க வைத்து அவருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்தார். அவரது அன்பை உணர்ந்து அவரது வீட்டிலேயே மல்லய்ய சித்தர் தங்கி இருந்தார்.

அந்த சமயத்தில் மல்லய்ய சித்தரின் உடலை சுத்தம் செய்து அவரை குளிக்க வைக்க ஜெயராமனும், அவரது மனைவி செஞ்சம்மாளும் எவ்வளவோ முயன்றனர். ஆனால் தன்னை சுத்தம் செய்வதற்கு மல்லய்ய சித்தர் அனுமதித்ததே இல்லை. இதனால் அவரது உடல் முழுவதும் எப்போதும் கருப்பாக, அழுக்கு படிந்தே காணப்பட்டது. ஆனால் ஒரு தடவை கூட அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது கிடையாது.

மல்லய்ய சித்தர் அந்த கிராமத்தில் இருந்த நாட்களில் யாரிடமும் பேசியது இல்லை. ஏதாவது மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவரிடம் ஒருநாள் ஜெயராமன், ‘‘சுவாமி நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு மல்லய்ய சித்தர், ‘‘என்னைப் பற்றிய பூர்வீக ரகசியங்கள் உனக்கு தேவை இல்லாதது’’ என்று சொல்லி எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

என்றாலும் தன்னை மல்லய்யா என்று அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவரை அனைவரும் மல்லய்ய சுவாமிகள் என்றே அழைத்தனர். அங்கிருந்த நாட்களில் மல்லய்ய சுவாமிகள் ஏராளமான சித்தாடல்களை நிகழ்த்தினார். சிலருக்கு மண்ணை அள்ளி பிரசாதம் போல கொடுப்பார்.

இந்த பிரசாதத்தை பெற்றவர்கள் என்ன நினைத்து வந்தார்களோ அவை அனைத்தும் குறைவின்றி கிடைத்தன. பெரும்பாலானவர்கள் நோய் தீர்வதற்காக மல்லய்ய சித்தரை அணுகினார்கள். அவர்களுக்கு அருள் உபதேசம் செய்த சுவாமிகள், மண்ணை கொடுத்து குணப் படுத்தினார். சென்னை அருகே உள்ள மஞ்சங்காரணி என்ற கிராமத்தை சேர்ந்த ஆசிரியை கிருஷ்ணவேணி உடல்நலத்தை குணப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

இவரைப் பற்றிய தகவல்கள் 1980-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை மக்களிடம் வெகுவாக பரவியது. இதனால் தினமும் ஏராள மானோர் மல்லய்ய சுவாமிகளை சந்தித்து பலன் பெற குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வகையில் மல்லய்ய சுவாமிகள் சித்தாடல்களை நிகழ்த்திக் காட்டினார்.

நெய்வேலியை சேர்ந்த சந்திரசேகர ரெட்டி- சரோஜா தம்பதிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் மல்லய்ய சுவாமிகளை சந்தித்து தங்களது மனவருத்தத்தை சொல்லி கண்ணீர் மல்க கேட்டனர். கையோடு அவர்கள் கொண்டு சென்றிருந்த தோசையையும் கொடுத்தனர். அதை மல்லய்ய சுவாமிகள் மணலில் புரட்டி சாப்பிட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு சந்திரசேகர ரெட்டிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

இப்படி மல்லய்ய சுவாமிகள் மூலம் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஒருதடவை ஜெயராமன் மும்முடிவரத்துக்கு சென்று பாலயோகி சுவாமிகளை சந்திக்க புறப்பட்டார். அப்போது மல்லய்ய சுவாமிகள் எங்கே செல்கிறாய் என்று கேட்டார். அதற்கு ஜெயராமன் கூறுகையில், “பாலயோகியை பார்க்க செல்கிறேன்” என்றார்.

உடனே மல்லய்ய சுவாமிகள், “அவன் போய்விட்டான். நீ போக வேண்டாம்” என்றார். அவர் சொன்னது போலவே மறுநாள் பாலயோகி சுவாமிகள் சித்தி அடைந்திருப்பது தெரிய வந்தது. இப்படி தொலைவில் நடப்பதை முன்கூட்டியே சொல்லும் ஆற்றலையும் மல்லய்ய சுவாமிகள் பெற்றிருந்தார்.

இதனால் மல்லய்ய சுவாமிகளை ஜெயராமன் முழுமையாக நம்பினார். மல்லய்ய சுவாமிகள் சொன்னதை தட்டாமல் செய்து வந்தார். லாரி ஓட்டும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய் என்று மல்லய்ய சுவாமிகள் சொன்னதை ஏற்று ஜெயராமன் தன்னை மாற்றிக் கொண்டார்.

ஜெயராமன் ஆந்திராவில் இருந்து ஆட்டுக் குட்டிகளை வாங்கி வந்து வளர்த்து விற்பதற்கு முடிவு செய்தார். ஆனால் அது பாவம் என்று சொல்லி மல்லய்ய சுவாமிகள் தடுத்து விட்டார். அதன் பிறகு மல்லய்ய சுவாமிகள் காட்டிய வழியில் நடந்ததால் ஜெயராமன் குறைவின்றி வாழ்ந்தார்.

அதேசமயத்தில் மல்லய்ய சுவாமிகளை காரனோடை பகுதியில் சிலர் ஏளனமாகவே நினைத்து நடத்தினார்கள். காரனோடை பாலத்தின் அருகே சாராயம் விற்கும் சிலர் மல்லய்ய சுவாமிகளை கிண்டல் செய்து அவரை வலுகட்டாயமாக சாராயம் குடிக்க வைத்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த மல்லய்ய சுவாமிகள் அவர்களிடம் இருந்து சாராய கேன்களை பறித்து வீசினார். அவை காரனோடை பாலத்தின் 2 தூண்கள் மீது பட்டது. அந்த 2 தூண்களும் நாளடைவில் இடிந்து போனது.

அதன்பிறகே அந்த பகுதி மக்கள் மல்லய்ய சுவாமிகளின் மகத்துவத்தை உணர்ந்தனர். ஒரு தடவை மல்லய்ய சுவாமிகள் ஒரு ஓட்டல் முன்பு நின்று உணவு கேட்டார். கோபமடைந்த ஓட்டல் உரிமையாளர் சாப்பாடு தர முடியாது போ என்று சொல்லி சுவாமிகளின் நெஞ்சில் வைத்து தள்ளிவிட்டார். இதை அறிந்த ஜெயராமன் அந்த ஓட்டல் உரிமையாளரை கண்டித்தார்.

அப்போது மல்லய்ய சுவாமிகள், “அவனை ஒன்றும் சொல்லாதே! அவன் நேரம் முடிந்தது” என்றார். மறுநாள் அந்த ஓட்டல் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது. அதில் அந்த ஓட்டல் உரிமையாளரும் மரணமடைந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு மல்லய்ய சுவாமிகளை அந்த பகுதி மக்கள் மிகவும் மரியாதையோடு பார்க்க தொடங்கினார்கள்.

மல்லய்ய சுவாமிகள் தனது மகிமைகளை காரனோடை பகுதியில் அதிகமாக வெளிப் படுத்திக்கொள்ளவில்லை. அதே சமயத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆற்றல் மிக்க சித்தர்கள் அவரை தேடி வந்து சந்தித்து சென்றனர். இதை பலதடவை பலரும் நேரில் பார்த்து இருக்கிறார்கள்.

ஒருதடவை மல்லய்ய சுவாமிகளுடன் இன்னொரு சாமியாரும் காணப்பட்டார். அவருக்கு பரோட்டாவும், பட்டானி குருமாவும் வாங்கி தருமாறு மல்லய்ய சுவாமிகள் கேட்டுக்கொண்டார். அதன்படி ஜெயராமன் பரோட்டாவும், பட்டானி குருமாவும் வாங்கி வந்தார். ஆனால் அந்த சாமியாரை அங்கு காணவில்லை. உடனே மல்லய்ய சுவாமிகளிடம் இங்கிருந்த அந்தசுவாமி எங்கே போனார்? நான் பரோட்டா வாங்கி வந்திருக்கிறேன் என்றார்.

அதற்கு மல்லய்ய சுவாமிகள், “அவருக்கு நேரமாகி விட்டது. எனவே மெக்காவுக்கு புறப் பட்டு சென்று விட்டார்” என்றார். இப்படி மல்லய்ய சுவாமிகள் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

ஒருதடவை காரனோடையை சேர்ந்த குகன் என்ற புகைப்படக்காரர் மல்லய்ய சுவாமிகளை புகைப்படம் எடுத்தார். இதை கவனித்த மல்லய்ய சுவாமிகள், “என்னை உன் பெட்டிக்குள் அடக்க முடியாது. நான் அதில் பதிவாகி இருக்க மாட்டேன்” என்றார். அவர் சொன்னது போலவே மல்லய்ய சுவாமிகளின் உருவம் பதியாமல் மற்ற காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

சினிமா, அரசியல் உள்பட அனைத்து துறையினரிடமும் அற்புதங்களை நிகழ்த்திய மல்லய்ய சுவாமிகள் 1988-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி பரிபூரணம் அடைய போவதாக கூறினார். இந்த உலகில் இருந்து விடை பெற போகிறேன் என்று 9 நாட்களுக்கு முன்பே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார். சொன்னது போலவே சரியாக 18-ந் தேதி இரவு 10 மணிக்கு அவர் தனது ஆத்மாவை பிரித்துக்கொண்டார்.

அவரது உடல் காரனோடை கொசஸ்தலை ஆற்று பாலத்தின் கீழ் வடகரையில் ஜீவ சமாதி செய்யப்பட்டது.

அந்த சமாதியில் சலவை கல் மேடை மீது மல்லய்ய சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயராமன் குடும்பத்தினர் அதை பராமரித்து வருகிறார்கள். வருகிற 3-ந் தேதி மல்லய்ய சுவாமிகளின் 33-வது குரு பூஜை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News