ஆன்மிகம்
சிவன் பூஜை

சிவன் கோவில்களில் நாளை சிவராத்திரி விழா கொண்டாட்டம்

Published On 2021-03-10 02:42 GMT   |   Update On 2021-03-10 02:42 GMT
மகா சிவராத்திரி விழா நாளை( 11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. நாளை இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.
இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா வருகிற 11-ந்தேதி இரவு கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 11-ந்தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக, ஆராதனைகளுடன் விழா நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மீனாட்சி அம்மனுக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10 மணி தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால அபிஷேகம் 11 மணி முதல் 11.45 வரையிலும், 3-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 4-வது காலம் 1 மணி முதல் 1.45 மணி வரையிலும் நடைபெறுகிறது.

மேலும் சுந்தரேசுவரர் சாமிக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10.45 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-வது காலம் 11.45 மணி முதல் 12.45 வரையிலும், 3-வது காலம் 1 மணியில் இருந்து 1.45 மணி வரையிலும், 4-வது காலம் 2 மணி முதல் 2.45 மணி வரையிலும் நடைபெறுகிறது.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நாளை காலை 9.30 மணிக்கு மேல் சிறப்பு யாக சாலை பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணிக்கு சாமிக்கு முதல் கால பூஜையில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களுடன் இரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 2 மணிக்கு 3 கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.

கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் சாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் அபிஷேக நேரத்தில் அமர்ந்து தரிசனம் செய்யும் முறை (அமர்வு தரிசனம்) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசிவீதி தென்திருவாலவாய கோவில் ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மகா சிவராத்திரி விழா விடிய, விடிய நடைபெறுகிறது.

உத்தங்குடி நாகர் கோவில், ஆத்திக்குளம் கணபதி கோவில், ஆவின் பால விநாயகர் கோவில், பீ.பி.குளம் முத்துமாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவில் ஆகிய கோவில்களில் உள்ள சிவ சன்னதியிலும் 4 கால பூஜைகள் நடைபெறும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கருவறையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் சன்னதியில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது. இதேபோல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில்களிலும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. திருநகர் அண்ணா பூங்கா வளாகம் சித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், திருப்பரங்குன்றம் பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கும் பூஜைகள் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் இரவு 10 மணிக்கு மேல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 4 கட்டமாக சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடக்கிறது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.

மேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் மற்றும் திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலூர் சிவன்கோவிலில் நாளை இரவு 9.30 மணி, 12 மணி, 2 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் தட்சிணாமூர்த்தி பட்டர் தலைமையில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்து திருவாசகம் மற்றும் சிவபுராணம் படித்து வழிபடுவார்கள். திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் ஆகும். இங்குள்ள மிக பழமையான திருமறைநாதர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் இரவு 9 மணி, இரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாதசுவாமி கோவிலில் 4 கால அபிஷேகம், பூஜைகள் விடிய விடிய நடைபெறுகிறது. திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாத சாமி கோவிலிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடைபெறுகிறது.

திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நாளை 6 மணிக்கு யாக சாலை பூஜையுடன் மகா சிவராத்திரி திருவிழா துவங்கும். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணி முதல் கால பூஜை நடைபெறும். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து மீனாட்சி சொக்கநாதர்-அம்மனை தரிசிக்க கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருமங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தில் உள்ள பாலாறு அய்யன் கோவிலில் இரவு 11 மணி அளவில் பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பயறு வகைகள் கொண்டுவந்து அவித்து அதனை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவர். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவு இடித்தும் பிரசாதம் வழங்கப்பட்டு, விடிய, விடிய விழித்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

உசிலம்பட்டியில் உள்ள திடியன் கைலாசநாதர் கோவில், ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் நாளை மாலை 6 மணி, 9 மணி, 12 மணி, 3 மணி என 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சிவராத்திரி விழா விடிய, விடிய நடைபெறுகிறது.
Tags:    

Similar News