செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே

சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள்

Published On 2021-10-19 02:44 GMT   |   Update On 2021-10-19 02:44 GMT
பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் காங்கிரசை பலப்படுத்த தீவிரமாக உழைத்து வருகிறார். அதனால் அங்கு காங்கிரசுக்கு சில சாதகமான விஷயங்கள் நடைபெறும்.
கலபுரகி :

பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி அரசியல் சாசனம் மற்றம் ஜனநாயகத்தை அழித்து வருகிறார். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் பா.ஜனதாவை தோற்கடித்து, அதன் மூலம் பா.ஜனதா, மோடிக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போது தான் மத்திய அரசு தனது தவறுகளை திருத்தி கொள்ளும்.

சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சி முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துவிட்டது. ஆனால் நமது நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. டீசல் விலையும் சில மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. கலால் வரியை மத்திய அரசு அதிகளவில் உயர்த்தியதே இதற்கு காரணம்.

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, கலால் வரி மிக குறைவாக இருந்தது. அதனால் அப்போது கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதும், பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவாக இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் இளம் தலைவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரித்தனர். அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுகிறார்கள்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நானும் பிரசாரத்திற்கு செல்கிறேன். ஜனநாயகத்தில் தங்களின் கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் காங்கிரசை பலப்படுத்த தீவிரமாக உழைத்து வருகிறார். அதனால் அங்கு காங்கிரசுக்கு சில சாதகமான விஷயங்கள் நடைபெறும்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Tags:    

Similar News