செய்திகள்

லஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும் விவகாரம்: மேற்கு வங்க சட்டசபையில் இருந்து காங்.- சிபிஎம் வெளிநடப்பு

Published On 2019-06-24 13:17 GMT   |   Update On 2019-06-24 13:17 GMT
மேற்கு வங்கத்தில் லஞ்சப் பணம் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பிரச்சினை எழுப்பிய காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது லஞ்சப் புகார் அதிகரித்தது. இதற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி உத்தரவை முதல்வர் மம்தா பானர்ஜி பிறப்பித்தார். தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக மக்களிடம் லஞ்சம் வாங்கியிருந்தால், அந்த பணத்தை அவர்களிடம் திருப்பி தந்துவிட வேண்டும் என உத்தரவிட்டார். 

இந்த விவகாரம் (கட் மணி) மேற்கு வங்க மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்த பொதுமக்கள் பலர், அதனை திருப்பி கேட்கத் தொடங்கி உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி உள்ளனர். லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த விவகாரம் இன்று சட்டசபையிலும் எதிரொலித்தது. லஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டது தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் முழக்கங்கள் எழுப்பினர். சபாநாயகரின் இருக்கைக்கு முன்னால் சென்று கோஷமிட்டனர். பின்னர் அனைவரும் இன்றைய அவை நடவடிக்கைகளை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News