செய்திகள்
சாலை மறியல் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

Published On 2020-12-05 14:50 GMT   |   Update On 2020-12-05 14:50 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜெயக்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

அதேபோல அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை அருப்புக்கோட்டை நகர போலீசார் கைது செய்தனர்.

சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனிக்குமார் முன்னிலையில் முக்குராந்தலில் இருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தபால் அலுவலகம் முன்பு விவசாயிகள் வேளாண் சட்ட திருத்த நகலை எரித்தனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால்நிலையத்தை முற்றுகையிட்டு மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாரத், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை, ஒன்றிய செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல ராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட அமைப்பாளர் அம்மையப்பன், மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 152 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News