செய்திகள்
வனிதா

கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது- பள்ளி ஆசிரியருக்கு வலை வீச்சு

Published On 2021-07-16 04:05 GMT   |   Update On 2021-07-16 04:05 GMT
நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 4 மாதத்திற்கு பிறகு போலீசர் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயத39). விவசாயி. இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

சென்றாயன் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி அதிகாலை வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே சென்றாயனின் தந்தை மொக்கராஜ் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை தனது மருமகள் கொலை செய்து விட்டதாகவும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்றாயனின் மனைவி வனிதாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

பின்னர் போலீசார் கிடுக்கிபிடி கேள்விகளால் தனது கணவரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். இதுகுறித்து வனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அய்யனார் (50) என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை எனது கணவர் கண்டித்தார். அய்யனார் வத்தலக்குண்டுவில் அரசு பள்ளியில் வேலை பார்த்து வருவதால் அடிக்கடி செலவுக்கு பணம் தருவார். இதனால் நானும் அவரது ஆசைக்கு இணங்கினேன். தொடர்ந்து எனது கணவர் எங்களை பின் தொடர்ந்து கண்டித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி சம்பவத்தன்று எனது கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து விட்டதாக தெரிவித்தோம். இதனை உறவினர்கள் நம்பி விட்டனர்.

இருந்தபோதும் எனது மாமனார் என் மீது சந்தேகம் கொண்டு புகார் தெரிவித்ததால் நான் சிக்கிக்கொண்டேன் என்றார். இதனையடுத்து வனிதாவை போலீசார் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தப்பி ஓடிய கள்ளக்காதலனான அய்யனாருக்கு திருணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது போலீசார் தேடி வருவதால் அவர் பணியாற்றி வந்த பழைய வத்தலக்குண்டு அரசு பள்ளிக்கும் போலீசார் தகவல் தெரிவித்து அவரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News