ஆன்மிகம்
ஸ்ரீபுரம் தங்கக்கோவில்

ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி கோவில்: நாளை மறுநாள் கும்பாபிஷேகம்

Published On 2021-01-23 03:47 GMT   |   Update On 2021-01-23 03:47 GMT
ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீசக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
வேலூர் :

ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் சக்திஅம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீபுரத்தில் கடந்த 2000 ஆண்டில் நாராயணி கோவிலும், 2007-ம் ஆண்டு தங்கக்கோவிலும் கட்டப்பட்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இடமாக ஸ்ரீபுரம் உள்ளது. தொடர்ச்சியாக ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டது.

பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தங்கக்கோவில் வளாகத்தில் முக்கிய கடவுளான விநாயகருக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 700 டன் கருங்கற்களால் தங்கக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்தி கணபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இடம்பெற உள்ள விநாயகர் சிலை 1,700 கிலோ வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. விநாயகரை வணங்கினால் நல்லது கிடைக்கும். அமைதி மற்றும் செழிப்பு உண்டாகும்.

இந்த கோவிலின் மகாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்கிரகத்துக்கு கீழ் வைக்கப்படும் யந்திரத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நாளை (இன்று) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதைமுன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் வருகிற 25-ந் தேதி வரை நவதானியங்களால் ஆன 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகளால் தமிழ் முறைப்படி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. வேதமுறைப்படியும் பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கும்பாபிஷேகம் தமிழ் மற்றும் வேதமுறைப்படி நடைபெறுகிறது. இந்தகோவில் முழுவதும் கட்டி முடிக்க ரூ.15 கோடி செலவானது.

கும்பாபிஷேகத்துக்கு முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News