செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின்

தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை- கொளுத்தும் வெயிலிலும் வீதி வீதியாக சென்றனர்

Published On 2021-04-04 06:34 GMT   |   Update On 2021-04-04 06:34 GMT
கொளுத்தும் வெயிலுக்கு பயந்து காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர். இன்று இறுதி நாள் என்பதால் இடைவிடாமல் பிரசாரம் மேற்கொண்டனர்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (6-ந்தேதி) நடைபெறுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

இந்த 2 கூட்டணிகளுக்கு மாறாக கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, தினகரனின் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணி ஆகியவையும் களத்தில் உள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கியுள்ளது.

இதன் மூலம் தேர்தல் களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி புரிந்துள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அந்த கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற முனைப்புடன் அ.தி.மு.க. அரசின் குறைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 2 கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன், தினகரன், சீமான் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படி அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியுடன் நிறைவுபெறுகிறது. இதையடுத்து கடைசி நாளான இன்று தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொளுத்தும் வெயிலுக்கு பயந்து காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர். இன்று இறுதி நாள் என்பதால் இடைவிடாமல் பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி தனது சொந்த தொகுதியான எடப்பாடியை அடுத்த பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தி பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்ட அவர் கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி, நங்கவள்ளி, வனவாசி, ஓமலூர் ஆகிய இடங்களில் அவர் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று அவர் பிரசாரம் செய்தார்.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 7 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகே தனது பிரசாரத்தை அவர் நிறைவு செய்கிறார்.



தி.மு.க. தலைவர். மு.க. ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று காலை 9 மணிக்கு தனது இறுதி கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அந்த தொகுதியில் போட்டியிடும் தனது மகனான உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் அருகில் அவர் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம் தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

இன்று மாலையில் எழும்பூர், திரு.வி.க. நகர் தொகுதிகளில் பிரசாரம் செய்யும் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு தனது தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை தொடங்கி அங்கேயே முடிக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் தான் போட்டியிடும் தொகுதியில் வார்டு வார்டாக சென்று மக்களை சந்தித்து இன்று இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்.

கமல்ஹாசன் பிரசாரத்துக்காக கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் திரண்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று காலை 9.30 மணிக்கு தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மணலி கலைஞர் நகர், லபமேடு பகுதி, சத்திய மூர்த்திநகர், ஜோதி நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த சீமான் பின்னர் திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் டெப்போ பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மாலையில் திருவொற்றியூர்- சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் உள்ள எழுத்துக்காரன் தெரு அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் அவர் அங்கேயே தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று முதல் கோவில்பட்டி தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இறுதி நாளான இன்றும் கோவில்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்தார்.

விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா இன்று இறுதி கட்ட பிரசாரம் செய்தார். அவர் மங்கலம்பேட்டை, மணவாளநல்லூர், வயலூர், புதுக்குளம், குப்பாநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் விருத்தாசலம் நகர் பகுதியான ஜங்‌ஷன் ரோடு, பெரியார்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதே போன்று தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் வாக்காளர்களை கவரும் வகையில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் “களை” கட்டியுள்ளது.
Tags:    

Similar News