ஆன்மிகம்
சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சியின் போது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2019-11-04 04:51 GMT   |   Update On 2019-11-04 04:51 GMT
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌‌ஷ்டி திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.

திருவிழாவில் 7-ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகே உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.

மாலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமி, அம்பாள் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளிலும் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் வீதிஉலா வருகின்றனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News