செய்திகள்
பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி: பசவராஜ் பொம்மை

Published On 2021-09-25 02:54 GMT   |   Update On 2021-09-25 02:54 GMT
அறிவிப்புகர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தியேட்டர்கள் உள்பட வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

அதன் பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கர்நாடகத்தில் தியேட்டர்களை திறக்கவும், 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஆனால் சினிமா ரசிகர்கள் போதிய அளவுக்கு வராததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை. இதனால் முக்கிய கதாநாயகர்களின் படங்களை திரையிடாமல் உள்ளனர்.

இந்த நிலையில் கன்னட சினிமா துறையினர், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி அளித்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் மாவட்டங்களில் 100 சதவீத இருக்கைகளும், பாதிப்பு 1-ல் இருந்து 2 சதவீதத்திற்குள் இருந்தால் 50 சதவீத இருக்கைகளும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பாதிப்பு 2 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அத்தகைய மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடப்படும்.

சினிமா பார்க்கும் பார்வையாளர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் ஆவது தடுப்பூசி போட்டியிருக்க வேண்டும். அத்தகையவர்களை மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இதே விதிமுறையுடன் மாநிலத்தில் பப்புகள் வருகிற 3-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகளில் 100 சதவீத குழந்தைகளை அமர வைத்து பாடம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற விதிமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். தசரா பண்டிகைக்கு தனியாக விதிமுறைகள் வெளியிடப்படும். கேரளா, மராட்டிய மாநில எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

யாதகிரி, ராய்ச்சூர், கலபுரகி, மைசூரு மாவட்டங்களில் தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மத்தியில் கொரேனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News