செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உபரி நீர் சேமிப்பால் டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது- முதல்வர் பேட்டி

Published On 2019-07-22 09:04 GMT   |   Update On 2019-07-22 09:04 GMT
உபரியாக கடலில் கலக்கும் நீரையே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப உள்ளதாகவும், இதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

உபரியாக கடலில் கலக்கும் நீரையே சேலம் மாவட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 100 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உபரி நீர் சேமிப்பால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்பது வதந்தி. ஒரு சொட்டு நீராக இருந்தாலும் அதை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம். 

காவிரி ஆற்றில் 3 அல்லது 4 இடங்களில் ஆய்வு செய்து, ஒன்றரை டிஎம்சி அளவுக்கு தண்ணீரை சேமிக்க கதவணைகள் அமைக்கப்படும். முதற்கட்டமாக கரூரில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு போதிய காவிரி நீர் வந்தவுடன் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.



சென்னை-சேலம் இடையே நவீன முறைப்படி அதிவிரைவு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 8 வழிச் சாலையை நிறைவேற்ற வேண்டும் என சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர், சிலர் எதிர்க்கிறார்கள். 8 வழிச் சாலைக்காக யாரையும் வற்புறுத்தியோ நெருக்கடி தந்தோ நிலம் எடுக்க மாட்டோம். தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு அல்ல.

பக்தர்களின் வசதிக்காக அத்திவரதரை இடமாற்றுவது குறித்து அர்ச்சகர்களுடன் ஆலோசித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவில் சேரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது பற்றி கேட்டபோது, “எந்த உண்மையான அதிமுக தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது” என்றார் முதலமைச்சர். 
Tags:    

Similar News