செய்திகள்
கொலை வழக்கில் 4 பேர் சரண்

திருச்சி ரவுடி கொலை வழக்கில் கரூர் கோர்ட்டில் 4 பேர் சரண்

Published On 2021-03-17 11:26 GMT   |   Update On 2021-03-17 11:26 GMT
திருச்சியில் ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கரூர் கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.
கரூர்:

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி. அவரது மறைவிக்கு பிறகு இவரது தம்பி கேபிள் சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள் போன்ற தொழில்கள் செய்து வந்தார். கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது.

இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்தநிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(வயது 35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அரிமயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்த முத்துகுமார்(28), அதே பகுதியை சேர்ந்த சரவணன்(21) மற்றும் அரியமங்கலத்தை சேர்ந்த காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர்.

அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News