செய்திகள்
கோப்பு படம்

அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் - முடிச்சூர் பகுதியில் 100 வீடுகளை இன்று தண்ணீர் சூழ்ந்தது

Published On 2019-12-02 11:10 GMT   |   Update On 2019-12-03 04:55 GMT
கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முடிச்சூர் பகுதியில் உள்ள 100 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாம்பரம்:

அடையாறு ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் படப்பை அருகில் உள்ள மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு அது அடையாறு ஆற்றில் விடப்பட்டது.

இதனால் அடையாறு ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பெருங்களத்தூர் அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த இடங்கள் அனைத்தும் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ளன.

அடையாறு ஆற்றில் சென்ற தண்ணீர் கரை தாழ்வான பகுதிகள் வழியாக இன்று காலையில் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியில் சென்றனர். பலர் தங்களது உறவினர்கள் வீடுகளில் போய் தங்கினார்கள். முகாம்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். அதே நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் டியூப்புகளை படகுகளாக மாற்றி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர்.

ஏற்கனவே பெய்த மழையால் முடிச்சூர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் இன்று அடையாறு ஆற்று தண்ணீரும் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினரும் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மழை வெள்ள பாதிப்பு குறித்து முடிச்சூர் அமுதம் நகரைச் சேர்ந்த சஞ்சன்யா கூறியதாவது:-

நான் நர்சாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து நாங்கள் குடியேறினோம். 2015-ம் ஆண்டு மழை வெள்ளப்பாதிப்பு போல் இனி இருக்காது என்று நம்பி இங்கு குடியேறினோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் எங்கள் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.

இதனால் நான் இன்று வேலைக்கு செல்ல முடியவில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரஸ்வதி (வரதராஜபுரம்): 2015-ம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக நாங்கள் வீட்டை காலி செய்து விட்டு வெளியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். அந்த வெள்ளத்தின்போது எங்கள் வீட்டின் முதல் மாடி வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது.

இதனால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருகள் சேதம் அடைந்தது. அப்போது அந்த இடத்தை பார்வையிட்ட முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இங்கு வந்து சென்றிருக்கின்றனர்.

இனியாவது இந்த பாதிப்பு இருக்காது என்று நாங்கள் நம்பி இருந்த வேளையில் இப்போது பெய்த மழையினால் மீண்டும் அதே வெள்ள பாதிப்பு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இப்போதும் எங்கள் வீட்டின் முன்பு முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அரசு எப்படியாவது அதிகாரிகளை முடுக்கி விட்டு எங்களுக்கு ஒரு நல்ல விடிவு காலத்தை உருவாக்கி தர வேண்டும்.

முடிச்சூரைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, “நாங்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். சிறிய மழைக்கே இந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று காலை முதல் எங்கள் வீட்டு முன்பு 3 பாம்புகளும் படை எடுத்து சென்றன. வெள்ள நீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்தில் ஒன்றாவது தெரு முதல் 70 தெருக்கள் வரை மழை நீர் வெளியேற வழி இல்லாமல் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

வீட்டிற்கு உள்ளே மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். தெருக்கள் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சேகரன் கூறுகையில், “கொரட்டூர் பகுதியில் சரியான மழை நீர் வடிகால் அமைக்காததால் மழைநீர் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரிக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் அனைத்திலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாலும் இந்த மழை நீர் வெளியேற வாய்ப்பில்லாமல் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.
பலத்த மழை காரணமாக அனைத்து வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காததே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் விரைந்து இந்த மழை நீரை வெளியேற்ற வேண்டும்” என்றார்.

வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த 100-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

Similar News