செய்திகள்
தகவல் தொடர்பு பலகை.

துபாய் போலீஸ் நிலைய கார் நிறுத்த பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான புதிய சேவை

Published On 2020-10-14 04:00 GMT   |   Update On 2020-10-14 04:00 GMT
துபாய் போலீஸ் நிலைய கார் நிறுத்த பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான புதிய தகவல் தொடர்பு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காரில் இருந்தபடியே உள்ளே உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்று செல்லலாம்.
துபாய்:

துபாய் போலீஸ் துறையின் குற்ற புலன் விசாரணை பிரிவின் உதவி தலைமை ஆணையாளர் கலீல் இப்ராகிம் அல் மன்சூரி கூறியதாவது:-

துபாய் போலீஸ் துறையில் தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பலர் நேரடியாக அலுவலகங்களுக்கு வருகை புரிந்து பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். இதில் அதிகமாக புகார்கள் அல்லது ஆலோசனை பெறுவதற்கு போலீஸ் நிலையங்களுக்கு வாகனங்கள் மூலம் வருகை புரிந்து வருகின்றனர்.

அமீரக தேசிய கொள்கை மற்றும் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் ‘நமது சமூகம் அனைவருக்குமான நகரம்‘ என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பான முறையில் போலீஸ் துறையின் சேவைகளை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது போலீஸ் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு உதவும் வகையில் அரபி மொழியில் லப்பை (இதோ உங்கள் சேவைக்கு நான் இருக்கிறேன்) என்ற தலைப்பில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக பர்துபாய் போலீஸ் நிலைய கார் நிறுத்தப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தகவல் தொடர்பு பலகை நிறுவப்பட்டுள்ளது.

இந்த பலகை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கார் நிறுத்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே போலீஸ் நிலையத்திற்கு வருகை புரிபவர்கள் பலகையை தொடலாம். அந்த பலகையின் கீழ் புறத்தில் ஒரு பட்டன் உள்ளது. அதனை அழுத்தினால் உடனடியாக உள்ளே உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி தொடர்பு கொண்டு பதிலளிப்பார். அவர் பேசுவதை கேட்க ‘ஸ்பீக்கர்’ ஒன்றும் அந்த பலகையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காரில் இருந்து இறங்காமலேயே உள்ளே உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்று செல்லலாம். மேலும் குற்றவியல் மற்றும் போக்குவரத்து தொடர்பான புகார்களையும் அளிக்க இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News