கோவில்கள்
கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவில்

கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவில்

Published On 2022-02-19 07:32 GMT   |   Update On 2022-02-19 07:32 GMT
ஸ்ரீராமருக்கு சோழ மன்னன் எழுப்பிய கந்தர்வகோட்டை ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மனித குலத்திற்கு உதாரண புருஷராக திகழும் ஸ்ரீ கோதண்ட ராமர் இருக்கிறார். சோழ மன்னர்களில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய கோவில் இது. பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியை ஆண்ட தொண்டைமான் மன்னர் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள கல்வெட்டு குறிப்புக்கள் இக்கோவில்களில் இருக்கின்றன.

முற்காலங்களில் நமது நாடு பல சிற்றரரசு தேசங்களாக பிரிந்திருந்த போது நாம கீர்த்தனை செய்யும் கலைஞர்கள் ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு சென்று நாம கீர்த்தனம் செய்வதோடு, அங்கே ஆட்சி புரியும் மன்னர்கள் பற்றியும் புகழ்ந்துரைப்பர். அப்படி ஒரு முறை தீவிர சிவ பக்தனான கண்டராதித்த சோழன் ராமாயண நாம கீர்த்தனை கேட்கும் போது அதில் வரும் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா பிராட்டியார் மீது மிகுந்த பக்தி கொண்டு தனது ராஜ்ஜியத்தில் ராமருக்கு ஒரு கோவில் கட்ட முடிவு செய்தார்.

அப்போது சோழ தேசத்தின் பகுதியாக இருந்த இந்த கந்தர்வகோட்டையில் அழகிய ராமர் கோவிலை கட்டி, அங்கு பிராமணர்கள் இன்ன பிற மக்கள் வாசிக்க கிராமத்தையும், பால் தேவைகளுக்கு பசுக்கள் போன்றவற்றையும் தானமாக அளித்து, ராமருக்கு நித்ய பூஜைகள் நடக்கும் படி ஏற்பாடுகள் செய்தான். இந்த கோதண்ட ராமருக்கு பூஜைகள் செய்து வழிபட தொடங்கிய பின்பு சோழ ராஜ்ஜியம் மேலும் செழித்தோங்கியது என கூறப்படுகிறது. இக்கோவிலை கட்டிய கண்டராதித்த சோழனின் சிலை இக்கோவிலில் இன்றும் உள்ளது.

கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் கோவில் சிறப்புக்கள்

இக்கோவில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதமாக காட்சியளிக்கிறார். இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலின் ஆச்சர்ய நிகழ்வாக ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும். அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம்

அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.

கோவில் முகவரி

அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவில்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் - 613301
Tags:    

Similar News