வழிபாடு
பழனி முருகன் கோவில்

பார் புகழும் பழனி...

Published On 2022-03-18 04:19 GMT   |   Update On 2022-03-18 04:19 GMT
முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தயிர்க்காவடி, பால்காவடி கொண்டு வந்து பங்குனி திருநாளில் வழிபட்டால் நம்வீட்டில் தொழில் சிறந்து, செல்வம் பெருகும்.
உலக புகழ்பெற்ற புண்ணியத்தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி திகழ்கிறது. நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் முருகப்பெருமானை புகழ்ந்து பாடி அவன் அருளை பெற்ற திருத்தலம் என்பதால் தனிச்சிறப்பு பெற்று திகழ்கிறது. பழனியில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. ஆன்மிக அன்பர்கள் பழனியை திருவிழா நகரம் என்றும் அழைக்கின்றனர்.

பன்னிரு கைகளை கொண்டு, ஆறுமுகங்களோடு சூரனை வென்ற மாவீரன். அசுரர்களை அழித்தபின் இந்திரன் தனது மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளில் முருகப்பெருமானுக்கு மணமுடித்து கொடுத்தார். அத்திருமண நாளே மண்ணுலகில் பங்குனி உத்திர திருநாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை இருபொழுதும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் தங்கமயில், வெள்ளிக்காமதேனு, வெள்ளியானை, ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனத்தில் உலா வருகிறார்.

பங்குனிஉத்திர பெருவிழாவில் பழனியாண்டவர் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும். இதை காண கண் கோடி வேண்டும் என்பர். ‘பாசி படர்ந்த மலை, பங்குனித்தேர் ஓடும் மலை’ என்று பாடும் பெருமை உடையதாய் பழனி மலை விளங்குகிறது. பங்குனி திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாவ வினைகள் ஒழிந்து நல்வினை பிறக்கும், இல்லம் செல்வமயமாய் செழிக்கும். குழந்தைபேறு கிட்டும். கல்யாணம் கைகூடி வரும்.

முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தயிர்க்காவடி, பால்காவடி கொண்டு வந்து பங்குனி திருநாளில் வழிபட்டால் நம்வீட்டில் தொழில் சிறந்து, செல்வம் பெருகும். வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்க தீர்த்தக்காவடி எடுத்து பழனி ஆண்டவனின் அருளை பெறுங்கள், ஆனந்தம் அடையுங்கள்.

பழனிவேலு, சித்தனாதன் சன்ஸ், பழனி.
Tags:    

Similar News