செய்திகள்
லோகர்தாகா வாக்குச்சாவடியில் ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- முதல் கட்டமாக 13 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2019-11-30 05:07 GMT   |   Update On 2019-11-30 05:11 GMT
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 13 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு துவங்கியது முதலே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தேர்தல் நடப்பதால், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜே.எம்.எம் கூட்டணி போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. 



முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

காலை 9 மணி நிலவரப்படி 11.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது.

இதற்கிடையே கும்லா மாவட்டம் பிஷன்பூரில் மாவோயிஸ்டுகள் ஒரு பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். ஆனால் இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வாக்குப்பதிவும் பாதிக்கப்படவில்லை. 
Tags:    

Similar News