செய்திகள்
அதிமுக - பாஜக

அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகள்- இன்று மாலை ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு

Published On 2021-03-03 06:46 GMT   |   Update On 2021-03-03 06:46 GMT
பா.ஜனதா - அதிமுக இடையே கூட்டணி தொகுதி உடன்பாடு இன்று மாலை அல்லது நாளை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

பா.ம.க.வுடன் உடன்பாடு ஏற்பட்ட நாளிலேயே பா.ஜ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்ததை தொடர்ந்து மறுநாள் அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார்கள்.

எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது பா.ஜனதா தரப்பில் 40 தொகுதிகள் கேட்கப்பட்டது.

அமித்ஷா கூறுகையில் அ.ம.மு.க. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் தென் மாவட்டங்களில் கணிசமான ஓட்டுகளை பெற இயலும்.

அ.தி.மு.க. பிரிந்து நிற்பதால் அது தி.மு.க.வுக்கு தான் சாதகமாக அமையும். எனவே அ.ம.மு.க.வுக்கு நாங்கள் தொகுதிகளை ஒதுக்கி கொள்கிறோம். உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டுள்ளார்.

இதுபற்றி கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றும் அமித்ஷா கூறி இருந்தார். அமித்ஷாவின் கருத்து குறித்து மறுநாள் தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசித்தனர்.

இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அ.ம.மு.க.வை கூட்டணியில் சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கட்சியினர் மத்தியில் இது குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது பற்றி பா.ஜனதா தலைமைக்கும் அ.தி.மு.க.வில் இருந்து பதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் சுமூக உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் கி‌ஷன் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவின் தலைவர் முருகன் ஆகியோருடன் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜனதா தரப்பில் 30 தொகுதிகள் வரை வலியுறுத்தி கேட்டனர். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகள் தருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

இது பற்றி அமித்ஷாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இரு கட்சி நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர்.

எனவே இன்று மாலை அல்லது நாளை பா.ஜனதா - அ.தி.மு.க. இடையே கூட்டணி தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News