செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே அகலப்படுத்தும் பணி நடைபெறும் இணைப்பு சாலையை படத்தில் காணலாம்.

கூத்தாநல்லூர் அருகே சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்படுமா?- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

Published On 2020-11-11 11:15 GMT   |   Update On 2020-11-11 11:15 GMT
கூத்தாநல்லூர் அருகே சாலை அகலப்படுத்தும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மேலபனங்காட்டாங்குடி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலையை அகலப்படுத்தும் பணிகள் முடிந்து சாலையில் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால், தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த சாலை வேளுக்குடி சந்திப்பு சாலை வழியாக கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, மோட்டார் சைக்கிள்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது மழை பெய்துவருவதால் சாலை சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சேற்றில் வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் ஜல்லி கற்கள் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து விடுவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சாலை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் வடகட்டளை, கானூர், மங்களாபுரம், மேலபனங்காட்டாங்குடி, வேளுக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News