ஆன்மிகம்
விழுப்புரம் அருகே முஸ்லிம்கள் கொண்டாடிய தீமிதி திருவிழா

விழுப்புரம் அருகே முஸ்லிம்கள் கொண்டாடிய தீமிதி திருவிழா

Published On 2020-08-31 04:14 GMT   |   Update On 2020-08-31 04:14 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமத்தில் உள்ள மசூதியில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி மசூதியை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.

பின்னர் இரவு 11.30 மணியளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். தொடர்ந்து. மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார்.

அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினார்கள். இது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்துவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இவர்களை தொடர்ந்து இரு மதத்தினரும் ஜாதி, மதம் பார்க்காமல் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

இதை பார்க்கும்போது நம்மையெல்லாம் புருவங்களை உயர்த்த செய்ததோடு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் மேள, தாளம் முழங்க மரகதபுரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர் மக்கள் அவர்களது காலில் விழுந்து வணங்கினார்கள்.

இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் முகரம் பண்டிகையையொட்டி இந்த விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக மரகதபுரத்தில் நடைபெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எப்படி விரதமிருந்து கோவிலுக்கு செல்கிறார்களோ அதுபோல் இவ்விழாவில் பங்கேற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News